"அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு" - மார்ச் 2021-ஜூன் 2022 "அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு" - மார்ச் 2021-ஜூன் 2022 

"அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டின்" துவக்க நிகழ்வு

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி, மார்ச் 19ம் தேதி, கணணி வலைத்தளம் வழியே, மெய்நிகர் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'அன்பின் மகிழ்வு' என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய திருத்தூது அறிவுரை மடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி, மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பு திருநாளன்று, வத்திக்கானில், கணணி வலைத்தளம் வழியே, மெய்நிகர் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"நமது தினசரி அன்பு" (“Our daily love”) என்ற தலைப்பில் நிகழும் இந்த சந்திப்பை, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவை, உரோம் மறைமாவட்டம், மற்றும், 2ம் யோவான் பவுல் இறையியல் நிறுவனம் என்ற மூன்று அமைப்புக்கள் இணைந்து நடத்துகின்றன.

இச்சந்திப்பின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டை" துவக்கிவைப்பார் என்றும், இம்மாதம் 19ம் தேதி துவங்கும் இந்த சிறப்பு ஆண்டு, 2022ம் ஆண்டு, ஜூன் 26ம் தேதி, உரோம் நகரில் நடைபெறவிருக்கும் 10வது உலக குடும்ப மாநாட்டுடன் நிறைவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பங்களை மையப்படுத்தி, 2014, 2015 ஆகிய இரு ஆண்டுகள், வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்கள் மாமன்றங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்ட எண்ணங்களைத் தொகுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Amoris Laetitia என்று இலத்தீன் மொழியில் தலைப்பிடப்பட்டுள்ள 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், 2016ம் ஆண்டு, மார்ச் 19ம் தேதி கையொப்பமிட்டார். இந்த திருத்தூது அறிவுரை மடல், 2016ம் ஆண்டு, ஏப்ரல் 8ம் தேதி வெளியானது.

இத்திருத்தூது அறிவுரை மடல், இவ்வாண்டு, ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி, இவ்வாண்டு, மார்ச் 19ம் தேதி, "அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு" துவங்கும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு, டிசம்பர் 27ம் தேதி, திருக்குடும்பத் திருநாளன்று அறிவித்தார்.

இக்குடும்ப ஆண்டின் துவக்க நிகழ்வாக, இம்மாதம் 19ம் தேதி, உரோம் நேரம், பிற்பகல் 3 மணி முதல் 6 மணி முடிய நடைபெறும் "நமது தினசரி அன்பு" மெய்நிகர் நிகழ்வில், பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Kevin Joseph Farrell, உரோம் மறைமாவட்டத்தில் திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பணியாற்றும் கர்தினால் Angelo De Donatis, மற்றும், 2ம் யோவான் பவுல் இறையியல் நிறுவனத்தின் தலைவர், பேராயர் Vincenzo Paglia ஆகியோர் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மெய்நிகர் நிகழ்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் செய்தி வாசிக்கப்படும் என்றும், குடும்பங்களை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்கள் மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற ஒரு தம்பதியர், இந்நிகழ்வில், தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி உரோம் நகரில் நடைபெறும் 10வது உலக குடும்ப மாநாட்டிற்குப் பிறகு, "அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு" முழுவதும் நடைபெறும் கூட்டங்களில் பகிர்ந்துகொள்ளப்படும் கருத்துக்களின் தொகுப்பு, உலகின் அனைத்து மறைமாவட்டங்கள், மற்றும், குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்றும், இந்த குடும்ப ஆண்டின் நிகழ்வுகளை ஒருங்கிணைப்போர் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 March 2021, 13:01