OSCE கூட்டத்திற்கு அருள்பணி யானுஸ் உர்பான்சிஸ்க் உரை OSCE கூட்டத்திற்கு அருள்பணி யானுஸ் உர்பான்சிஸ்க் உரை  

தடுப்பு மருந்துகளோடு, உடன்பிறந்த உணர்வு நிலையும் தேவை

நம் வாழ்வு முறைகளை மாற்றியமைக்கவேண்டிய தேவை குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டிய வாய்ப்பை இந்த பெருந்தொற்று வழங்கியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

பொருளாதார, நல, மற்றும், சமுதாய நெருக்கடிகளை உருவாக்கியுள்ள இன்றைய பெருந்தொற்று ஆபத்திலிருந்து விடுதலை பெற, நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டிய தேவை உள்ளது என, பன்னாட்டுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார், திருப்பீடப் பிரதிநிதியான அருள்பணி யானுஸ் உர்பான்சிஸ்க்.

OSCE எனப்படும் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அவையின் கூட்டத்தில், வியன்னாவிலுள்ள ஐ.நா. மற்றும் அனைத்துலக அமைப்புக்களின் திருப்பீடப் பிரதிநிதியாகச் செயல்படும் அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள், ‘பெருந்தொற்றுக்குப் பின்னான உலகம்’ குறித்து, மார்ச் 15, இத்திங்களன்று உரையாற்றுகையில் இவ்வாறு விண்ணப்பித்தார்.

உணவு, பொருளாதாரம், குடிபெயர்தல்கள் போன்றவற்றில் ஏற்கனவே பல்வேறு சிக்கல்களை சந்தித்துவந்த உலகில், எல்லைகளற்ற இந்த கொரோனா கிருமி தொற்றினால், நாடுகளும் மக்களும் தனிமைப்படுத்தல்களும், மக்களிடையே சந்தேக உணர்வுகளும் அதிகரித்துள்ளன, என கவலையை வெளியிட்ட அருள்பணி  உர்பான்சிஸ்க் அவர்கள், இத்தகைய நெருக்கடியிலிருந்து நாம் வெளிவர அனைவரும் ஒன்றிணைந்து உழைப்பதைத் தவிர வேறு வழியில்லை எனவும் எடுத்துரைத்தார்.

உலக வளங்களை அநீதியான முறையில் பகிர்வு செய்து, ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே நிலவும் இடைவெளியை அதிகரிக்கச் செய்துள்ள இன்றைய உலகில், ஒரு புதிய சமுதாய மற்றும், பொருளாதார ஒழுங்கமைவை உருவாக்கவேண்டியது குறித்தும், நம் வாழ்வு முறைகளை மாற்றியமைக்கவேண்டிய தேவை குறித்தும், ஆழமாக சிந்திக்கவேண்டிய வாய்ப்பை, இந்த பெருந்தொற்று வழங்கியுள்ளது, என மேலும் தன் உரையில் குறிப்பிட்டார் திருப்பீடப் பிரதிநிதி.

உலக அளவில் ஒருமைப்பாட்டுடன் செயல்படுதல், இறைவனின் படைப்பின் மீது அக்கறை, நலப்பாராமரிப்பு, குறிப்பாக, தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்க வழிசெய்தல், சரிநிகர் தன்மைகளையும் புறக்கணிப்புக்களையும் அகற்றல், என்பவை வழியாகவே இன்றைய சிக்கல்களிலிருந்து நாமனைவரும் ஒன்றிணைந்து வெளிவரமுடியும் என மேலும் எடுத்துரைத்தார், அருள்பணி உர்பான்சிஸ்க்.

இன்றைய உலகிற்கு, தடுப்பு மருந்துகளோடு இணைந்து, உடன்பிறந்த உணர்வு நிலையும், நம்பிக்கையும் தேவைப்படுகின்றன, என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய வார்த்தைகளையும் எடுத்துரைத்து, தன் உரையை நிறைவு செய்தார், திருப்பீடப் பிரதிநிதியான அருள்பணி உர்பான்சிஸ்க்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2021, 14:31