AGESCI சாரணர் குழுவினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் AGESCI சாரணர் குழுவினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 

சிலுவைப்பாதை சிந்தனைகளை வழங்கும் சாரணர் குழு

சென்ற ஆண்டு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் மக்களின் பங்கேற்பு ஏதுமின்றி நடைபெற்ற சிலுவைப்பாதை பக்தி முயற்சியைப்போலவே, இவ்வாண்டும் நடைபெறும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, சென்ற ஆண்டு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் மக்களின் பங்கேற்பு ஏதுமின்றி நடைபெற்ற சிலுவைப்பாதை பக்தி முயற்சியைப்போலவே, இவ்வாண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு நடைபெறும் சிலுவைப்பாதையின் ஒவ்வொரு நிலைக்கும் உரிய சிந்தனைகளை, இத்தாலியின் Umbria பகுதியில் அமைந்துள்ள, உகாண்டாவின் மறைசாட்சிகள் பங்கைச் சேர்ந்த "முதலாம் Foligno" என்றழைக்கப்படும் AGESCI சாரணர் குழுவைச் சேர்ந்த இளையோர் வழங்குகின்றனர்.

சிலுவைப்பாதையின் ஒவ்வொரு நிலைக்கும் உரிய ஓவியங்களை, "இறை அன்பின் அன்னை" என்று பொருள்படும், “Mater Divini Amoris” என்ற இல்லத்தையும், “Tetto Casal Fattoria” என்ற இல்லத்தையும் சேர்ந்த குழந்தைகளும், இளையோரும் உருவாக்குகின்றனர்.

"இந்த உலகம், சிறியதும் பெரியதுமான சிலுவைகளால் நிறைந்துள்ளது" என்ற கருத்தை வெளிப்படுத்தும் வண்ணம் எளிய முறையில் உருவாக்கப்படும் இந்த ஓவியங்களை, 3 முதல், 19 வயது முடிய உள்ள குழந்தைகளும், இளையோரும் தயாரித்து வருகின்றனர்.

8 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட இளம் ஆண்கள், பெண்கள் 145 பேரையும், அவர்களுக்கு வழிகாட்டும் 21 பேரையும் உள்ளடக்கிய AGESCI சாரணர் குழுவைச் சேர்ந்தவர்கள், தங்கள் ஒவ்வொரு நாள் அனுபவங்களின் அடிப்படையில் சிலுவைப்பாதையின் வெவ்வேறு நிலைகளுக்குத் தேவையான சிந்தனைகளை உருவாக்கியுள்ளனர்.

உகாண்டாவின் மறைசாட்சிகள் பங்கு, AGESCI சாரணர் குழு, வன்முறைகளுக்கு உள்ளான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள 'பெத்லகேம் பாதுகாப்பு இல்லம்', மற்றும் வீடற்றவர்கள் தங்குமிடம் ஆகியவற்றை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 March 2021, 15:37