OSCE கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் அருள்பணி Janusz Urbańczyk OSCE கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் அருள்பணி Janusz Urbańczyk 

மக்களின் நலனுக்காக ஊடகங்கள் பணியாற்றவேண்டும்

மோதல்கள் நிறைந்துள்ள இக்காலத்தில், உண்மையான, நடுநிலையான தகவல்களை, வழங்கவேண்டிய கடமையை, ஊடகங்களும், செய்தியாளர்களும் பெற்றுள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மக்களின் பொதுநலனுக்காக ஊடகங்கள் பணியாற்றவேண்டும் என்பதிலும், உண்மை, சுதந்திரம், நீதி, ஆகிய விழுமியங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் தகவல்களைப் பெறும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு என்பதிலும், திருப்பீடம் உறுதியான நிலைப்பாடு கொண்டுள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு கூட்டமொன்றில் கூறினார்.

ஐரோப்பாவில் பாதுகாப்பையும், கூட்டுறவையும் வளர்க்கும் நிறுவனமான OSCE ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் அருள்பணி Janusz Urbańczyk அவர்கள், "ஊடக சுதந்திரம் மற்றும், பாலின சமத்துவம்" என்ற தலைப்பில், வியென்னாவில், மார்ச் 9, இச்செவ்வாயன்று நடைபெற்ற கூட்டத்தில் திருப்பீடத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்திப் பேசினார்.

சரியான, தெளிவான, நடுநிலையான தகவல்களை, ஊடகங்களும், செய்தியாளர்களும் வழங்கவேண்டிய கடமையைப் பெற்றுள்ளனர் என்று கூறிய அருள்பணி Urbańczyk அவர்கள், குறிப்பாக, மோதல்கள் நிறைந்துள்ள இக்காலத்தில், நடுநிலையான, உண்மையான செய்திகளை வெளியிடுவது, மிக, மிக அவசியம் என்று எடுத்துரைத்தார்.

மனித துயரங்களை வெளியிடுவதில், ஆண்களைவிட, பெண்கள் கூடுதலான கவனத்துடன் செயலாற்றுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்பணி Urbańczyk அவர்கள், மனித துன்பங்களை, உணர்வுப்பூர்வமாக உள்வாங்கும் திறமை பெண்களுக்கு கூடுதலாக உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய ஒரு கருத்தையும் நினைவுகூர்ந்தார்.

ஊடகங்களில் பணியாற்ற ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும் என்பதை, தன் உரையில் வலியுறுத்திக் கூறிய அருள்பணி Urbańczyk அவர்கள், மோதல்கள் நிறைந்துள்ள பகுதிகளில் பணியாற்றச் செல்லும் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படவேண்டிய அவசியத்தைக் குறித்தும் எடுத்துரைத்தார்.

ஊடக நிறுவனங்களில், பல்வேறு நிலைகளில், ஆண்களையொத்த வாய்ப்புக்கள் பெண்களுக்கும் வழங்கப்படும் வேளையில், அமைதியையும், பாதுகாப்பையும் உறுதிசெய்யும் உண்மையான தகவல்கள் பகிரப்படுவது இன்னும் எளிதாகும் என்று அருள்பணி Urbańczyk அவர்கள், தன் உரையின் இறுதியில் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 March 2021, 14:25