புனித பூமியின் பராமரிப்புப் பணிகளுக்கு உதவ அழைப்பு

புனித பூமியின் புனிதத் தலங்களை பராமரிக்கவும், புனித பூமியில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து வாழ்வதை உறுதி செய்யவும, புனித வெள்ளி நிதி திரட்டல் வழியாக கத்தோலிக்கர்கள் உதவ முடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

புனித பூமியில் பிரான்சிஸ்கன் துறவுசபையினரின் பராமரிப்புப் பணிகளுக்கு புனித வெள்ளியன்று நிதி திரட்டும் வேளையில், தாராள மனதுடன் வழங்குமாறு, அதற்கு பொறுப்பாயுள்ள அருள்சகோதரர் Francesco Patton அவர்கள், காணொளிச் செய்தி ஒன்றின் வழியாக அழைப்பு விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் அனைத்துக் கத்தோலிக்கக் கோவில்களிலும் புனித பூமி பராமரிப்புப் பணிகளுக்கென நிதி திரட்டப்படுவது குறித்து தன் செய்தியை வெளியிட்டுள்ள அருள்சகோதரர் Patton அவர்கள், புனித பூமியின் புனிதத் தலங்களை பராமரிக்கவும், புனித பூமியில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து வாழ்வதை உறுதி செய்யவும, இந்த நிதி திரட்டல் வழியாக கத்தோலிக்கர்கள் உதவமுடியும் என தெரிவித்துள்ளார்.

இவ்வுலகம் கொரோனா பெருந்தொற்றையும், மேலும் பல இடர்பாடுகளையும் சந்தித்துவரும் நிலையில், புனித பூமிக்கு வருகை தரும் திருப்பயணிகளின் எண்ணிக்கை, குறைந்துள்ளதுடன், பலர் வேலை வாய்ப்புக்களையும் இழந்துள்ளதாகக் கூறும் இந்த காணொளிச் செய்தி, புனிதப் பகுதிகளைப் பராமரித்துவரும் பிரான்சிஸ்கன் துறவியர், தொடர்ந்து, இயேசு அடக்கப்பட்ட கல்லறையிலும், கெத்சமனி தோட்டத்திலும், பெத்லகேமிலும், நாசரேத்திலும், ஏனைய அனைத்து புனித தலங்களிலும், உலக நலனுக்காக இறைவேண்டல் செய்து வருவதாக அதில் குறிப்பிடுகிறது.

நாங்கள் மற்றவர்களுக்கு உதவ உதவுங்கள் என இச்செய்தியில் அழைப்பு விடுக்கும் பிரான்சிஸ்கன் அருள்சகோதரர் Patton அவர்கள், கல்வி நிலையங்கள் வழியாக புனித பூமி பகுதியின் 10,000 சிறார்க்கு நல்ல தரமான கல்வியை வழங்குவதுடன், புலம் பெயர்ந்தோருக்கும், உதவித்தேவைப்படும் மக்களுக்கும் உதவி வருவதாகவும், புனித வெள்ளியின் நிதி திரட்டல்களே இதற்கு உதவுவதாகவும் மேலும் தன் செய்தியின் வழியே, கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 March 2021, 15:45