கர்தினால் லூயிஸ் தாக்லே கர்தினால் லூயிஸ் தாக்லே 

பெருந்தொற்று உருவாக்கியுள்ள சமத்துவமற்ற நிலைகள்

உலகில் ஏற்கனவே நிலவும் நோய்களைத் தவிர, உடன்பிறந்த உணர்வின்மை, ஏழை-செல்வந்தர் இடைவெளி அதிகரிப்பு போன்ற நோய்களையும் பெருந்தொற்று உருவாக்கியுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று, உலகில் ஏற்கனவே நிலவும் நோய்களைத் தவிர, உடன்பிறந்த உணர்வின்மை, ஏழைகளையும், செல்வந்தரையும் பிரிக்கும் தடைச்சுவர்கள் அதிகரிப்பு போன்ற நோய்களையும் உருவாக்கியுள்ளது என்று, கர்தினால் லூயிஸ் தாக்லே அவர்கள் கூறியுள்ளார்.

“உலகின் காயங்களைத் தொடுதல், பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கை” என்ற தலைப்பில், இத்தாலியின் பொலோஞ்ஞாவிலுள்ள, அந்தோனியானம் பிரான்சிஸ்கன் அமைப்பு நடத்திய மெய்நிகர் கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், பெருந்தொற்றால் ஏழைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத்தின் தலைவரும், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவருமான கர்தினால் தாக்லே அவர்கள், இணையம் வழி ஆற்றிய உரையில், கைகளைக் கழுவுதல், விலகியிருத்தல் போன்ற, நலவாழ்வு சார்ந்த எளிய பெருந்தொற்று விதிமுறைகளை நிறைவேற்ற இயலாமல் இருக்கும் ஏழைகளை நினைத்துப் பார்க்க அழைப்பு விடுத்தார்.

உலகின் பல பகுதிகளில், தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது என்றும், 6 அல்லது 7 பேரைக் கொண்ட குடும்பங்கள், நெருக்கமான சூழல்களில் வாழ்ந்துவருகின்றன என்றும் எடுத்துரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், இந்த பெருந்தொற்று, உலகின் தவறான முன்னுரிமைகளை நமக்குப் படம்பிடித்து காட்டியுள்ளது என்று கூறினார்.

ஆயுதங்களையும், போரின் மற்ற கருவிகளையும் வாங்குவதற்கு பணம் இருக்கின்றது, ஆனால் ஏழைகளுக்கு முகக்கவசங்கள் வாங்கப் பணமில்லை என்று கூறிய கர்தினால், நம் தவறான தீர்மானங்கள் உருவாக்கியுள்ள பல்வேறு காயங்கள் பற்றியும் எடுத்தியம்பினார்.

கடந்த ஆண்டு மார்ச் 27ம் தேதி, வத்திக்கானின் காலியான புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை நிறைவேற்றிய உருக்கமான இறைவேண்டலில், மனிதஉரு எடுத்த இயேசு கிறிஸ்து, துன்புறும் அனைவரோடும் நெருக்கமாக இருக்கிறார் என்றும், எவருமே தனியாக நடப்பதில்லை, தனியாக இறப்பதில்லை, தனியாகத் துன்புறுவதில்லை, இதுவே மருந்து, அம்மருந்தே இயேசு கிறிஸ்து என்று அவர் நமக்கு நினைவுபடுத்தினார் என்றும், கர்தினால் தாக்லே அவர்கள் குறிப்பிட்டார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 March 2021, 15:19