புலம்பெயர்ந்த மக்களுடன் கர்தினால் டர்க்சன் புலம்பெயர்ந்த மக்களுடன் கர்தினால் டர்க்சன் 

காலநிலை நெருக்கடிக்கும் குடிபெயர்தலுக்கும் இடையே தொடர்பு

காலநிலை மாற்றம் கடல் நீர்மட்ட உயர்வுக்கு காரணமாகி வருவதால், உலகின் 40 விழுக்காட்டு மக்களின் வாழ்வு அச்சுறுத்தப்பட்டு வருகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இன்றைய உலகில் காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளை விளக்கி, இதனால் மக்கள் பெருமளவில் குடிபெயரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை, புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்து, அவைகளை சீர் செய்வதற்கான வழிமுறைகளை முன் வைக்கும் கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை.

'காலநிலை மாற்றங்கள் காரணமாக குடிபெயர்ந்துள்ள மக்களுக்கு மேய்ப்புப் பணி ஒருமுனைப்படுத்தல்கள்', என்ற தலைப்பில்  வெளியிடப்பட்டுள்ள இந்த ஏட்டிற்கு முன்னுரை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  பல புள்ளி விவரங்கள், கொள்கைகள், பரிந்துரைகள் என  இவ்வேடு முன்வைத்துள்ளவைகளை நாம் கவனமுடன் நோக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முதலில் ஒவ்வொருவரும் முடிவு செய்யவேண்டியது அவசியம், ஏனெனில், இயற்கையின் மீதும், உலக மக்களின் மீதும் ஒருவர் கொண்டிருக்கும் அக்கறையைச் சார்ந்தது அது, என தன் முன்னுரையில் கூறியுள்ளார்.

மனித குலத்தின் பேராசைகளும், பொறுப்பற்ற நிலைகளும் நம் பொது இல்லமாகிய இயற்கைக்கு எதிராக மனித குலத்தை மாற்றியுள்ளன,  என்பதை இக்கையேட்டின் முன்னுரையில் சுட்டிக்காட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திடீரென்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வந்த கோவிட்-19 பெருந்தொற்றுபோல் அல்லாமல், தொழில் புரட்சி காலத்திலிருந்தே தன் பாதிப்பை துவங்கியுள்ள காலநிலை மாற்றம் குறித்து மனித குலம் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற கவலையையும் அதில் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தையின் முன்னுரையுடன் பத்து தலைப்புக்களின் கீழ், காலநிலை மாற்றத்தால் குடிபெயர்ந்துள்ள மக்களுக்கு ஆற்றவேண்டிய மேய்ப்புப்பணி குறித்து உலக தலத் திருஅவைகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கும் இவ்வேடு, முதலில், காலநிலை நெருக்கடிகளுக்கும் குடிபெயர்தலுக்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து விவரிக்கின்றது.

2019ம் ஆண்டில் மட்டும் 3 கோடியே 30 இலட்சம் பேர் புலம் பெயர்ந்தவர்களாக மாறி, அவ்வெண்ணிக்கை எப்போதும் காணாத அளவு 5 கோடியே 10 இலட்சமாக உயர்ந்தது எனக் கூறும் இவ்வேடு, புதிதாக இணைந்தவர்களுள் 2 கோடியே 90 இலட்சம் பேர் இயற்கை பேரழிவுகளால் குடிபெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கிறது.

குறுகிய கால, மற்றும் நீண்ட கால இயற்கை பேரழிவுகளுக்கு காரணமாக இருக்கும் காலநிலை மாற்றங்களின் பாதிப்புகளுக்கு உள்ளாகும் மக்களை ஒரு தாய்க்குரிய அக்கறையுடன் திருஅவை நடத்திவருவது குறித்தும் இவ்வேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சுழல், அதாவது, காலநிலை நெருக்கடி, உலகில் நிலவும் பல மோதல்களுக்கு காரணமாக இருந்து வருவதைக் குறித்தும் விவரிக்கின்றது இவ்வேடு.

உலகின் 40 விழுக்காட்டு மக்கள், கடற்கரையிலிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வாழ்வதை சுட்டிக்காட்டும் இவ்வேடு, காலநிலை மாற்றம் கடல் நீர்மட்ட உயர்வுக்கு காரணமாகி வருவதால்,  எண்ணற்ற மக்களின் வாழ்வு அச்சுறுத்தப்பட்டு வருவதையும் எடுத்தியம்புகிறது.

காலநிலை மாற்றங்களுக்கும் குடிபெயர்தலுக்கும் இருக்கும் தொடர்பு, காலநிலை மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல், குடிபெயர்தலுக்கு வேறு மாற்று காணல், மக்களை தயார்படுத்துதல், அவர்களை சமுதாயத்தில் ஒன்றிணைத்தல்,  கொள்கைத் திட்டங்கள் உருவாக்குகையில் நேர்மறை பாதிப்புக்களை புகுத்தல், மேய்ப்புப்பணித் திட்டங்களை அதிகரித்தல், அரசு மற்றும் அரசு சாரா இயக்கங்களுடன் இவர்களுக்கென இணைந்து பணியாற்றல், இயற்கை பாதுகாப்புடன் கூடிய பயிற்சி வழங்கல், சுற்றுச்சூழல், மற்றும் குடிபெயர்தல் குறித்த ஆய்வுகளை ஊக்குவித்தல், என பல்வேறு தலைப்புகளில் விவாதித்து, தலத்திருஅவைத் தலைவர்களுக்கும், பணியாளர்களுக்கும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் இக்கையேடு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 March 2021, 14:52