முதுமை கடவுளின் கொடை முதுமை கடவுளின் கொடை 

வயது முதிர்ந்தோர் பராமரிப்பு பற்றிய புதிய ஏடு

முதுமை, கடவுளிடம் முழுமையாகச் சரணடைவதற்கு ஏற்ற காலம் என்பதால், அந்தக் காலம் கடவுளோடு நல்லதொரு உறவை உருவாக்க வழங்கப்பட்டுள்ள வாய்ப்பாக நோக்கப்படவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“முதுமை: நம் வருங்காலம்” என்ற தலைப்பில், பெருந்தொற்று முடிவுற்ற காலத்திற்குப்பின் வயது முதிர்ந்தோரின் நிலைமை பற்றியும், அவர்கள் மீது காட்டப்படவேண்டிய அக்கறை பற்றியும் விவரிக்கும் ஏடு ஒன்றை, திருப்பீட வாழ்வு கழகம், பிப்ரவரி 09, இச்செவ்வாயன்று மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்துயரம், இக்காலக்கட்டத்திலும், அண்மை வருங்காலத்திலும், நம் சமுதாயங்களில் கொணர்ந்துள்ள மற்றும், கொணரவிருக்கின்ற கடும் விளைவுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் பற்றிய சிந்தனைகளை இந்த ஏட்டின் வழியாக வழங்கவிரும்புவதாக, திருப்பீட வாழ்வுக் கழகம் கூறியுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று, இருவிதமான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று கூறும் அவ்வேடு, ஒருபுறம், நம் அனைவருக்கும் இடையே சார்புநிலை அவசியம் என்பதையும், மறுபுறம், மிகப்பெரும் சமத்துவமின்மைகள் உருவாகியுள்ளன என்பதையும் உணர்த்தியுள்ளது என்று கூறியுள்ளது.

கோவிட்-19ம், வயது முதிர்ந்தோரும், பலவீனமான வயது முதிர்ந்தோருக்கு பராமரிப்பும், உதவியும் ஆற்றுவதற்கு புதிய வழிமுறைகள், முதியோர் பராமரிப்பு இல்லங்களின் நிலைமையை சீர்படுத்தல் போன்ற தலைப்புக்களில் பல்வேறு பரிந்துரைகளையும், சிந்தனைகளையும் இந்த ஏடு வழங்கியுள்ளது,.

கோவிட்-19ம், வயது முதிர்ந்தோரும்

கோவிட்-19ன் முதல் அலையில் இறந்தவர்களில் வயது முதிர்ந்தோரே அதிகம் என்றும், அதேநேரம் குடும்பங்கள் வயதானவர்களைப் பராமரிக்க மிகுந்த அக்கறை காட்டின என்றும், உலக நலவாழ்வு நிறுவனத்தின் ஐரோப்பிய அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்டுள்ள அவ்வேடு, முதுமை பற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எண்ணங்களையும் பதிவுசெய்துள்ளது.

முதுமை, ஒரு நோய் அல்ல, மாறாக, தனிமை ஒரு நோயாக இருக்கலாம், ஆயினும், பிறரன்பு, அருகாமை, மற்றும், ஆன்மீக ஆதரவால் அதனைக் குணப்படுத்தலாம் என்றும், முதுமை, கடவுளிடமிருந்து பெறுகின்ற ஒரு கொடை என்றும், ஆண்டுகளின் வளமை, மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படவேண்டிய கருவூலம் என்ற விழிப்புணர்வை இந்த பெருந்தொற்று நம் அனைவரிலும் மீண்டும் புகுத்தியுள்ளது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

முதியோர் பராமரிப்பு

கலாச்சார அளவிலும், பொதுவான வாழ்விலும், கிறிஸ்தவக் கண்ணோட்டத்திலும், வயது முதிர்ந்தோரைப் பராமரிக்க புதிய வழிமுறைகள் பற்றி சிந்திப்பதற்கு நாம் அழைக்கப்படுகிறோம் என்றும், வயதானவர்களை மதிக்கக் கற்றுக்கொள்வது, நம் சமுதாயங்களின், மற்றும், நமது சொந்த  வருங்காலத்திற்கும் மிகவும் முக்கியம் என்றும், அந்த ஏடு கூறுகிறது.

வயதானவர் ஒவ்வொருவரும், மற்றவரிலிருந்து மாறுபட்டவர் என்பதால், ஒவ்வொரு வயதானவரின் வாழ்க்கைக் கதையும் புறக்கணிக்கப்படக் கூடாது என்றும், வீடுகளிலும், வயதானவர்கள் வாழ்கின்ற இடங்களிலும் அவர்கள் மீது மிகுந்த அக்கறை காட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் இவ்வேடு, வயதானவர் பராமரிப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

நோயாளிகள் மருத்துவரைச் சந்திக்க இயலாமல் தொலைவிடங்களில் இருக்கும்போது அவர்களுக்கு வலைஒளிக் காட்சிகள் வழியாக ஆலோசனை வழங்குதல், செயற்கை அறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள், வயதானவர் பராமரிப்புக்கு, ஒருங்கிணைந்த  உதவிகளை ஆற்ற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பங்குத்தளங்கள், திருஅவை குழுமங்கள்

முதியோர் பராமரிப்பு இல்லங்கள் சீரமைக்கப்படவேண்டும் என்று கூறும் அவ்வேடு, மறைமாவட்டங்கள், பங்குத்தளங்கள், திருஅவை குழுமங்கள் ஆகியவை, முதியோர் உலகம் பற்றி மேலும் கவனமுடன் சிந்திக்க அழைக்கப்படுகின்றன என்று உரைக்கும் அவ்வேடு, வயது முதிர்ந்தோரும், ஞானத்துடன் வாழும் முறைகளைத் தேடவேண்டும் என்றும், முதியோரின் சான்றுவாழ்வு மிகவும் முக்கியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இளையோர், முதியோர்

முதுமை, ஆன்மீகச் சூழலிலும் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்று கூறும் அவ்வேடு,  முதுமை, கடவுளிடம் முழுமையாகச் சரணடைவதற்கு ஏற்ற காலம் என்பதால், அந்தக் காலம் கடவுளோடு நல்லதொரு உறவை உருவாக்க வழங்கப்பட்டுள்ள வாய்ப்பாக  நோக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

முதுமையின் பலவீனம், அறியும் ஆர்வத்தையும் தூண்டும், எனவே, இளையோர், முதியோரின் சார்புநிலையைப் புரிந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ள இந்த ஏடு, வயது முதிர்ந்தோரின் பலவீனத்தை ஏற்கத் தெரிந்த சமுதாயமே, தன் உறுப்பினர்களுக்கு வருங்காலம் பற்றிய நம்பிக்கையை வழங்கமுடியும் என்றும் கூறியுள்ளது.

“முதுமை: நம் வருங்காலம்” என்ற இந்த ஏட்டில், திருப்பீட வாழ்வு கழகத்தின் தலைவர் பேராயர் வின்சென்சோ பாலியா, செயலர், ஆயர் ரென்சோ பெகோராரோ ஆகிய இருவரும் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 February 2021, 13:18