செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் 

நன்னெறி அணுகுமுறை நோக்கி செயற்கை நுண்ணறிவு

2050ம் ஆண்டுக்குள், ஏறத்தாழ ஆயிரம் கோடி பேருக்கு உலகம் உணவு வழங்கவேண்டிய நிலை உருவாகும் - FAO இயக்குனர் QU Dongyu

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“செயற்கை நுண்ணறிவு நன்னெறிகளுக்கு ஓர் அழைப்பு” என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆதரவோடு, பாப்பிறை வாழ்வுக் கழகம், மற்ற அமைப்புகளோடு இணைந்து வெளியிட்ட ஏட்டின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, பேராயர் வின்சென்சோ பாலியா அவர்கள், அவ்வேடு பற்றிய தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

2020ம் ஆண்டு, பிப்ரவரி 28ம் தேதி, பாப்பிறை வாழ்வுக் கழகம், மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம், FAO எனப்படும் உணவு வேளாண்மை அமைப்பு, IBM எனப்படும் பன்னாட்டு வர்த்தகக் கருவிகள்,  மற்றும், புதியன படைப்பது குறித்த இத்தாலிய அமைச்சகம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த ஏட்டில் கையெழுத்திட்டன.

வெளிப்படைத்தன்மை, சமுதாயத்திற்குப் பயன், பொறுப்புணர்வு மற்றும், அனைவரையும் உள்ளடக்கிய வழிகளில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் வளர்ச்சிப் பணிகள், வருங்காலத்திற்குப் பயனுள்ளவைகளாக அமையவேண்டும் என்று இந்த ஏடு வலியுறுத்துகிறது.

பாப்பிறை வாழ்வுக் கழகத்தின் முயற்சியால் கையெழுத்திடப்பட்ட இந்த ஏடு பற்றிப் பேசிய பேராயர் பாலியா அவர்கள், கடந்த ஓராண்டைத் திரும்பிப் பார்க்கும்போது, இதில் கையெழுத்திட்டுள்ள அமைப்புகள், தங்களின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில், அறநெறி அணுகுமுறையைக் கையாண்டு இருப்பதைக் காண முடிகின்றது என்று தெரிவித்தார்.

மனித சமுதாயம் முழுவதற்கும் பணியாற்றுவதற்கென, தொழில்நுட்பத்தில் ஒரு பொதுவான அணுகுமுறையை ஊக்குவிக்கும்பொருட்டு, ஒரே கடவுள் கொள்கையுடைய மதங்களோடு உரையாடலுக்கான வழி திறக்கப்பட்டுள்ளது என்று, பேராயர் பாலியா அவர்கள் கூறியுள்ளார்.

சமத்துவமற்ற, மற்றும், பரந்துவிரிந்த வளர்ச்சியின்றி, நீதியும், அமைதியும், உலகளாவிய உடன்பிறந்த உணர்வும் நிலவாது என்றும் கூறிய பேராயர் பாலியா அவர்கள், இந்த ஏடு வெளியிடப்பட்டதற்குப்பின், பாப்பிறை வாழ்வுக் கழகமும், பாகுபாடுகளற்ற முறையில், எவரும் ஒதுக்கப்படாமல், அனைத்து மனிதருக்கும் பணியாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது என்று கூறினார்.

FAO இயக்குனர் QU Dongyu அவர்கள் கூறுகையில், 2050ம் ஆண்டுக்குள், ஏறத்தாழ ஆயிரம்  கோடி பேருக்கு உலகம் உணவு வழங்கவேண்டிய நிலை உருவாகும் என்றும், வேளாண்மை மற்றும், உணவு அமைப்புகளில் நீடித்த நிலையான வளர்ச்சி இருந்தால் மட்டுமே இது இயலக்கூடியதாய் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 February 2021, 15:42