மனித உடன்பிறந்தநிலை - முதல் உலக நாள் மனித உடன்பிறந்தநிலை - முதல் உலக நாள் 

பிப்ரவரி 4ம் தேதி, மனித உடன்பிறந்தநிலை - முதல் உலக நாள்

இணையதளத் தொடர்பு வழியாக இடம்பெறும் கொண்டாட்டங்களின்போது, மனித உடன்பிறந்த நிலைக்கான இவ்வாண்டு விருதும் வழங்கப்பட உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித உடன்பிறந்தநிலையின் உலக நாள் இம்மாதம் 4ம் தேதி இணையத்தொடர்பு வழியாக நடைபெறுவதில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியிலிருந்து இணையத் தொடர்பு வழியாக அபுதாபி இளவரசர் Sheikh Mohammed Bin Zayed அவர்களின் முன்னிலையில் இடம்பெறும் இந்த இணையவழி கலந்துரையாடலில், Al-Azhar இஸ்லாமிய மதகுரு Ahmad Al-Tayyeb, ஐ.நா. நிறுவனப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ், மற்றும் பல தலைவர்களுடன் திருத்தந்தையும் கலந்துகொள்வார்.

அபுதாபியை அடிப்படையாகக் கொண்டு இணையதளத் தொடர்பு வழியாக இடம்பெறும் இந்த கலந்துரையாடல், மற்றும், கொண்டாட்டங்களின்போது, மனித உடன்பிறந்த நிலைக்கான இவ்வாண்டு விருதும் வழங்கப்பட உள்ளது.

மனித உடன்பிறந்தநிலை என்ற ஏட்டினால் தூண்டப்பட்டு உருவாக்கப்பட்ட  இந்த மனித உடன்பிறந்த நிலை விருதை வழங்கும் நிகழ்ச்சி, பிப்ரவரி 4ம் தேதி, உரோம் நேரம் மாலை 2.30 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் மாலை 7 மணிக்கு வத்திக்கான் செய்திகள் நிறுவனம் வழியாக இணையவழி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதியை உருவாக்கும் நோக்கத்தில் ஒருவருக்கொருவர் உரையாடலை ஊக்குவித்து, உண்மையான சமுதாய நட்புறவை வளர்த்திட வேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள் தொடர்ந்து விண்ணப்பித்து வருவதன் தொடர்ச்சியாக, இந்த ,பிப்ரவரி 4ம் தேதி கூட்டம் இடம்பெறும் என அறிவித்தார், பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Miguel Ángel Ayuso Guixot.

2019ம் ஆண்டு,பிப்ரவரி 4ம் தேதி,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அபுதாபி திருப்பயணத்தின்போது, இஸ்லாமிய மதத் தலைமைக்குரு  Ahmad Al-Tayyeb அவர்களுடன், உலக அமைதிக்கும் ஒன்றிணைந்த வாழ்வுக்கும் உடன்பிறந்த நிலை, என்ற எட்டில் கையெழுத்திட்டதை சிறப்பிக்கும் விதமாக, ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஒவ்வொரு பிப்ரவரி 4ம் தேதியும், உடன்பிறந்த நிலையின் உலக நாள் சிறப்பிக்கப்படும் என கடந்த டிசம்பர் 21ம் தேதி ஒருமனதாக நிறைவேற்றி, அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 February 2021, 14:32