நரேக் நகரின் புனித கிரகரி நரேக் நகரின் புனித கிரகரி  

வத்திக்கானில் நரேக் நகரின் புனித கிரகரி திருநாள்

நரேக் நகரின் புனித கிரகரி, பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த, அர்மேனிய நாட்டு துறவி. இவர் எழுதிய “Book of Lamentations” என்ற நூல், அர்மேனிய இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பு என்று கருதப்படுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பொதுவான உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியின்படி, முதன் முறையாக, பிப்ரவரி 27, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கான் நாட்டில் சிறப்பிக்கப்பட்ட, நரேக் நகரின் புனித கிரகரியின் (St.Gregory of Narek) திருநாள் திருவழிபாடு பற்றி, கீழை வழிபாட்டுமுறை பேராயமும், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

திருப்பீடத்திற்கென பணியாற்றும் அர்மேனிய நாட்டுத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன், வத்திக்கான் நாட்டில் சிறப்பிக்கப்பட்ட இத்திருநாள் திருப்பலியை, கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி அவர்கள் உரோம் நேரம் காலை 10.30 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றினார்.

அதற்குப்பின், வத்திக்கான் நாட்டிலுள்ள தோட்டத்தில், 2018ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ஆசிர்வதித்து வைக்கப்பட்ட, நரேக் நகரின் புனித கிரகரியின் திருவுருவத்திற்கு முன்பாக, கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாடும் நடைபெற்றது.

நரேக் நகரின் புனித கிரகரியின் திருநாள், பிப்ரவரி 27ம் தேதியன்று, உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில், நினைவு நாளாகச் சிறப்பிக்கப்படும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2021ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி இணைத்ததையொட்டி, இச்சனிக்கிழமையன்று, இத்திருநாள், வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்டது.

நரேக் நகரின் புனித கிரகரி, பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த, அர்மேனிய நாட்டு துறவி. இவர் ஒரு கவிஞர், ஆழ்நிலை தியானச் சிந்தனை எழுத்தாளர், மற்றும், இசையமைப்பாளர். இவர் எழுதிய “Book of Lamentations” என்ற நூல், மிகவும் புகழ்பெற்றது, இது, அர்மேனிய இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பு என்று கருதப்படுகிறது. இவர் திருஅவையின் மறைவல்லுனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 February 2021, 15:38