புலம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றை சென்று சந்தித்த கர்தினால் டர்க்சன் புலம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றை சென்று சந்தித்த கர்தினால் டர்க்சன் 

தடுப்பூசி மருந்துகளை வளரும் நாடுகளிலேயே தயாரிக்க உதவுங்கள்

தடுப்பூசிகளை தயாரிக்கும் வசதிகள், ஏழை நாடுகளுக்கு இருப்பினும், காப்புரிமை போன்ற பல தடைகளால் இது இயலாமலிருப்பதையும் சுட்டிக்காட்டும் கர்தினால் டர்க்சன்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று நோய்க்கு எதிராக தடுப்பூசி போடும் திட்டத்தினை, இம்மருந்துகளை வளரும் நாடுகளிலே உற்பத்தி செய்ய உதவுவதன் வழியாக நிறைவேற்ற வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் கர்தினால் பீட்டர் டர்க்சன்.

கோவிட்-19 பெருந்தொற்றிற்கு தடுப்பூசி போடுவது, மற்றும், வளரும் நாடுகளிலேயே இத்தடுப்பு மருந்துகளை உற்பத்திச் செய்ய உதவுவது என்பவை குறித்து வத்திக்கான் செய்திக்கு பேட்டியளித்த, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் டர்க்சன் அவர்கள், ஒரு சில நாடுகளால் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த தடுப்பூசி மருந்துகள், அனைவருக்கும் கிடைக்க வழியில்லாமல் இருக்கிறது என்று கூறினார்.

உலகின் தென் பகுதி நாடுகள், இந்த மருந்திற்காக வட பகுதி நாடுகளை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, ஏழை நாடுகளிலேயே இதனை தயாரிக்க உதவவேண்டியது உலக சமுதாயத்தின் கடமையாகிறது என்று தன் பேட்டியில் எடுத்துரைத்தார் கர்தினால் டர்க்சன்.

கோவிட்-19 பெருந்தொற்று நோய்க்கெதிரான தடுப்பூசிகளை தயாரிக்கும் வசதிகள், செனகல், எத்தியோப்பியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இருப்பினும், காப்புரிமை போன்ற பல தடைகளால், இது இயலாமலிருப்பதையும் கர்தினால் டர்க்சன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

WTO என்ற உலக வர்த்தக அமைப்பு போன்ற நிறுவனங்கள், மக்கள் தொடர்புடைய முடிவுகளை எடுப்ப்தற்கு முன்னதாக, ஏழை நாடுகளிடமும் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினார், கர்தினால் டர்க்சன்.

திருத்தந்தையின் வழிகாட்டுதலின்படி வத்திக்கானில் துவக்கப்பட்டுள்ள கோவிட்-19 அமைப்பு, இத்தொற்றுநோய், மனதளவில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்கள் குறித்து ஆய்வுகளை நடத்திவருவதாகவும் உரைத்த, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் டர்க்சன் அவர்கள், இத்தொற்றுநோயின் பாதிப்புக்கு உள்ளாகியிருப்போர், மற்றும், இந்நோயால் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் இழந்து துருறுவோருக்கு, ஆறுதலின் கரத்தை நீட்ட வேண்டியது, ஒவ்வொருவரின் கடமை என்பதை, தன் பேட்டியில், வலியுறுத்திக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 February 2021, 12:56