வத்திக்கான் வானொலியின் 90வது ஆண்டு நிறைவு திருப்பலி 120221 வத்திக்கான் வானொலியின் 90வது ஆண்டு நிறைவு திருப்பலி 120221 

வத்திக்கான் வானொலி, ஒரு மைல்கல்

உலகிற்குத் திறந்தமனம், மக்களின் எதார்த்தமான வாழ்வோடு தொடர்பு, மறைப்பணியைத் தொடரவும், தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளவும் வழிமுறைகள் ஆகிய மூன்று பதங்களை மையப்படுத்தி மறையுரையாற்றினார், கர்தினால் பரோலின்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும் திருத்தந்தையின் குரலை பரப்புவதில், 90 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள வத்திக்கான் வானொலிக்கும், அந்த வானொலியில் இத்தனை ஆண்டுகள் பணியாற்றியுள்ள, மற்றும், பணியாற்றிவரும் அனைவருக்காவும் இறைவனுக்கு நன்றி சொல்வதாக, திருப்பீட செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

பிப்ரவரி12, இவ்வெள்ளியன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், வத்திக்கான் வானொலியின் 90வது ஆண்டு நிறைவையொட்டி, அதன் பணியாளர்களுடன் இணைந்து நன்றி திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றிய, கர்தினால் பரோலின் அவர்கள், எக்காலத்தையும்விட இக்காலத்தில், சமூகத்தொடர்பு சூழலில், நன்மைதரும் செய்திகளை வழங்கவேண்டிய தேவை அதிகம் உள்ளது என்று கூறினார்.

காதுகேளாதவர் நலம்பெறுதல் பற்றிய இந்நாளைய திருப்பிலியின் நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், இந்த வாசகம், சமூகத்தொடர்புப் பணியாற்றும் வானொலியோடு ஒத்துச்செல்வதாக அமைந்துள்ளது என்று கூறினார்.

உலகிற்குத் திறந்தமனம், மக்களின் எதார்த்தமான வாழ்வோடு தொடர்பு, மறைப்பணியைத் தொடரவும், தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளவும் வழிமுறைகள் ஆகிய மூன்று பதங்களை மையப்படுத்தி மறையுரையாற்றிய, கர்தினால் பரோலின் அவர்கள்,  குணமடைதல் என்பது, தொடர்புகொள்வதை, பேசுவதை, மற்றும், கேட்பதை, மீண்டும் இயலக்கூடியதாய் ஆக்குகின்றது என்றும் கூறினார்.

காதுகேளாதவரிடம், இயேசு கூறிய, திறக்கப்படு (மாற்.7,34) என்ற சொல்லை மையப்படுத்தி தன் சிந்தனைகளை வழங்கிய கர்தினால் பரோலின் அவர்கள், வத்திக்கான் வானொலி தொடங்கப்பட்ட காலம் முதல், உலகிற்கு, அதாவது, புவியியல்படி, உலகின் வெகுதொலைவில் உள்ள இடங்களுக்கு எல்லாம் திறந்ததாய் இருப்பதன் அடையாளமாக     இருக்கின்றது என்று கூறினார்.

மார்க்கோனியின் கண்டுபிடிப்பு, தொழில்நுட்பத்தில் புதுமையை ஏற்படுத்தியது, இன்று, காலத்தின் தேவைகளுக்கு ஏற்றால்போல் தேவையான யுக்திகளை மட்டுமல்லாமல், நம்பிக்கையை உருவாக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், வத்திக்கான் வானொலியின் உலகளாவிய தன்மை பற்றியும் எடுத்துரைத்தார்

இன்றைய நற்செய்தி தொடர்பு பற்றியும் பேசுகிறது என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், இரண்டாம் உலகப்போரின்போது, மக்களுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்த இவ்வானொலி மகத்தான பணியாற்றியுள்ளது என்றும், வானொலியின் பணியாளர்கள், ஒவ்வொரு நாளும் ஆற்றிவருகின்ற உழைப்பை, ஆண்டவரோடு கொள்ளும் ஒளிவுமறைவற்ற உறவின் அடிப்படையில் பணியாற்றுமாறும் ஊக்கப்படுத்தினார்.

இவ்வாறு பணியாற்றுவது, காலங்களின் தேவைகளுக்குத் திறந்தமனதாய் இருக்கவும், வானொலியின் தனிப்பண்பான உலகளாவிய கூறை வளர்க்கவும் உதவும் என்றுரைத்து, மீண்டும் வானொலி பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார், கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 February 2021, 15:41