காமரூன் நாட்டில் கர்தினால் பரோலின் காமரூன் நாட்டில் கர்தினால் பரோலின்  

காமரூன் நாட்டு மக்கள், நம்பிக்கையின் விதைகளாகச் செயல்பட...

ஆப்ரிக்க கண்டம் அனுபவித்துவரும் துன்பங்கள் குறித்து திருத்தந்தை அறிந்துள்ளார், அக்கண்டத்தின் மக்களுக்கு இறை ஆறுதலை வேண்டுகிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அண்மைய பல ஆண்டுகளாக வன்முறைகளாலும், பல்வேறு நெருக்கடிகளாலும் துன்பங்களை சந்தித்துவரும் காமரூன், மற்றும், ஆப்ரிக்க கண்டம் முழுமையுடன் தன் நெருக்கத்தையும் அக்கறையையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிடுவதாக அறிவித்தார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

ஆப்ரிக்காவிற்குச் சென்றுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், காமரூன் நாட்டின் Bamenda பேராயர் Andrew Nkea Fuanya அவர்களுக்கு பால்யம் வழங்கிய திருப்பலியில் மறையுரையாற்றிய வேளையில், ஆப்ரிக்க கண்டம் அனுபவித்துவரும் துன்பங்கள் குறித்து திருத்தந்தை அறிந்திருப்பதாகவும், வன்முறைகளுக்கு பலியானவர்கள், மற்றும், அண்மை நெருக்கடிகளால் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் இழந்துள்ளவர்களுக்கு இறை ஆறுதலை திருத்தந்தை வேண்டுவதாகவும் தெரிவித்தார்.

ஆப்ரிக்கக் கண்டத்தின் அமைதி, மற்றும், ஒப்புரவிற்கான ஆவலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கலந்துகொள்வதாக உரைத்த கர்தினால், திருத்தந்தையின் இக்கண்டத்திற்கான ஒருமைப்பாட்டின் அர்ப்பணத்தை வெளியிடுவதாகவும், அக்கறை, ஒப்புரவு, குணப்படுத்தல் ஆகியவைகளை ஊக்குவிப்பதாகவும், குறிப்பாக, இந்த கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மக்களோடு இருக்க விரும்புவதை வெளிப்படுத்துவதாகவும் தன் பயணம் அமைந்துள்ளது என்று கூறினார்.

திருத்தந்தையுடனும், உடன் ஆயர்களுடனும் கூடிய நெருங்கிய பிணைப்பு, மற்றும், தன் மறைமாவட்டத்தின் மீதான சிறப்பு அதிகாரம் ஆகியவைகளை குறிக்கும் பால்யத்தை புதிய பேராயருக்கு வழங்கிய திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள், காணாமல்போன ஆட்டைத் தேடிச்சென்று அதனை தன் தோளில் சுமந்துவரும் நல்லாயனை ஒருவரில் தூண்டுவதாக இது உள்ளது என்றார்.

இறைவார்த்தையின் முக்கியத்துவம் குறித்தும் தன் மறையுரையில் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், ஒவ்வொருவரும் தங்களுடன் எப்போதும் ஒரு சிறு விவிலியத்தை எடுத்துச்செல்ல திருத்தந்தை தொடர்ந்து அழைப்பு விடுத்துவருவதையும் நினைவூட்டினார்.

காமரூன் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், வன்முறைகளையும், பிரிவினைகளையும், மோதல்களையும் கைவிட்டு, நம்பிக்கையின் விதைகளாகச் செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 February 2021, 15:44