தவக்கால தியான சிந்தனையை வழங்கும் கர்தினால் Raniero Cantalamessa தவக்கால தியான சிந்தனையை வழங்கும் கர்தினால் Raniero Cantalamessa 

மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் – தவக்காலச் சிந்தனை

“மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” (மாற். 1:15) என்ற தலைப்பில், இவ்வாண்டின் தவக்காலத்திற்கென முதல் தியான சிந்தனையை வழங்கினார், கர்தினால் Cantalamessa

மேரி தெரேசா :வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீடத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகளும் பங்கேற்ற, இவ்வாண்டின் முதல் தவக்கால தியான சிந்தனையை, பிப்ரவரி 26, இவ்வெள்ளிக்கிழமை காலையில், “மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” (மாற். 1:15) என்ற தலைப்பில் வழங்கினார், கர்தினால் Raniero Cantalamessa.

கடந்த பல ஆண்டுகளாக, ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் வெள்ளிக்கிழமைகளில் திருப்பீட உயர் அதிகாரிகளுக்கு தியான சிந்தனைகளை வழங்கிவரும் கர்தினால் Cantalamessa அவர்கள், மனம் மாறுங்கள் என்பது, நம்புவது என்றும், மனம் மாறுவது அல்லது, மனம் வருந்துவது என்பது, இறையாட்சியில் நுழைவது நோக்கிச் செல்வதாகும் என்றும் விளக்கிக் கூறினார்.

அன்று பெந்தக்கோஸ்து நாளில் தூய ஆவியார் செயல்பட்டதுபோன்று, இன்று தூய ஆவியார் செயல்படும் இடங்கள் எவை என்பதை, புனித அகுஸ்தீனாரின் கூற்றுக்களிலிருந்து விளக்கிய கர்தினால் Cantalamessa அவர்கள், திருநற்கருணை, மற்றும், திருமறைநூல்கள் தவிர, புனித அகுஸ்தீனார் கூறியிருக்கும் மற்றொரு சிறப்பான அம்சத்தைப்பற்றியும் எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவர்கள், ஆவியாரின் மழையில் நனையும் அனுபவத்தைப் பெறவேண்டும் என்பது பற்றி புனித அகுஸ்தீனார் கூறுகிறார் என்றும், இந்த அனுபவத்தைப் பெற, கானா திருமணத்தில் அற்புதம் நிகழ உதவிய அன்னை மரியாவின் பரிந்துரையைக் கேட்போம் என்றும், கர்தினால் Cantalamessa அவர்கள், தவக்காலத்திற்கென வழங்கிய தன் முதல் தியான உரையில் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 February 2021, 15:09