தேடுதல்

Vatican News
அணு ஆயுத ஏவுகணைகள் அணு ஆயுத ஏவுகணைகள்  (©Scanrail - stock.adobe.com)

ஆயுத ஒழிப்பு குறித்து பேராயர் காலகரின் காணொளிச் செய்தி

தூரத்திலிருந்து இயக்கப்படும் ஆயுதங்கள், மனிதர்கள் அல்லாமல், ரோபோக்களால் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் ஆகிய புதிய வகை ஆயுத ஆபத்தைக் குறித்து நாம் கவலைகொள்ள வேண்டும் - பேராயர் காலகர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இன்றைய உலகம் பல்வேறு பொதுவான பிரச்சனைகளைச் சந்தித்துவரும் இத்தருணத்தில், நாடுகள் தங்கள் தனிப்பட்ட நலனை மட்டும் முன்னிறுத்தாமல், உலகின் பொது நலனை முன்னிறுத்தி சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு கூட்டம் ஒன்றுக்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.

திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள், அணு ஆயுத ஒழிப்பு குறித்து ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.வின் உயர் மட்ட கூட்டத்திற்கு அனுப்பிய காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறினார்.

ஆயுத ஒழிப்பு என்பதை இதுவரை சிந்தித்த வேளையில், அணு ஆயுதங்கள், மற்றும் உயிரியல் ஆயுதங்கள் ஆகியவற்றை மட்டும் சிந்தித்து வந்தோம் என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் காலகர் அவர்கள், தற்போதையச் சூழலில், வான்வெளியை கட்டுப்படுத்த நாடுகளிடையே நடைபெறும் போட்டிகளையும் நாம் சிந்திக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று கூறினார்.

மின்வெளி, மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் துணையுடன், தூரத்திலிருந்து இயக்கப்படும் ஆயுதங்கள், மனிதர்கள் அல்லாமல், ரோபோக்களால் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் ஆகிய புதிய வகை ஆயுத ஆபத்தைக் குறித்தும் நாம் கவலைகொள்ள வேண்டும் என்று பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் விண்ணப்பித்தார்.

அணு ஆயுதங்கள் முற்றிலும் நீக்கப்பட்ட உலகம் சாத்தியமே என்று திருப்பீடம் மீண்டும், மீண்டும் நினைவுறுத்தி வருவதை, தான் இந்த பன்னாட்டு கூட்டத்தில் வலியுறுத்திக் கூற விழைவதாக பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

நாடுகள், ஆயுதங்களுக்காக செலவிடும் நிதியை, ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு செலவிடவேண்டும் என்பதை, கோவிட்-19 பெருந்தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் காலகர் அவர்கள், இந்த பெருந்தொற்றிலிருந்து நாம் வெளியேற அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதையும் நினைவுறுத்தினார்.

நாம் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இல்லையெனில், ஒருவரும் பாதுகாப்பாக இல்லை என்ற உலகளாவிய உண்மையை அனைத்து நாடுகளும் உணர்ந்து, ஆயுதக்களைவையும், சமுதாய நீதியையும் உறுதி செய்ய வேண்டும் என்று பேராயர் காலகர் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

24 February 2021, 15:51