தேடுதல்

Vatican News
"அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கிறார்" என்ற இறைவேண்டல் முயற்சியின் கையேடு "அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கிறார்" என்ற இறைவேண்டல் முயற்சியின் கையேடு  

ஆண்டவரோடு 24 மணி நேரங்கள், மார்ச் 12-13

இவ்வாண்டில் கடைப்பிடிக்கப்படும், "ஆண்டவரோடு 24 மணி நேர இறைவேண்டல்" பக்திமுயற்சிக்கு "அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கிறார்" (தி.பா.103:3) என்ற சொற்கள், தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா :வத்திக்கான் செய்திகள்

உலகில், கொரோனா பெருந்தொற்றின் அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவிவந்தாலும், இவ்வாண்டும், "ஆண்டவரோடு 24 மணி நேர இறைவேண்டல்" என்ற பக்திமுயற்சியைக் கடைப்பிடிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

திருத்தந்தையின் இந்த அழைப்பு பற்றி தகவல் வெளியிட்ட, புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை, தவக்காலத்தின் நான்காம் ஞாயிறன்று கடைபிடிக்கப்படும் ‘மகிழும் ஞாயிறு’க்கு முந்தைய வெள்ளி, சனி, ஆகிய இரு நாள்களில் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்ற இந்த பக்திமுயற்சி, இவ்வாண்டு, மார்ச் மாதம், 12 மற்றும், 13ம் தேதிகளில் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

"அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கிறார்" (தி.பா.103:3) என்ற திருப்பாடல் சொற்கள், இவ்வாண்டில் கடைப்பிடிக்கப்படும், "ஆண்டவரோடு 24 மணி நேர இறைவேண்டல்" பக்திமுயற்சியின் தலைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து கிறிஸ்தவ சமுதாயங்களும், இந்த பக்திமுயற்சியை கடைப்பிடிப்பதற்கு உதவியாக, புதியவழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவை, சிறிய வழிகாட்டி கையேடு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

வருகிற மார்ச் மாதம் 12, 13 ஆகிய தேதிகளில், கத்தோலிக்கர் அனைவரும், ஆண்டவரோடு 24 மணி நேரம் இறைவேண்டலில் செலவழிப்பதற்கு நேரம் ஒதுக்கி, ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெற்று, இறைவார்த்தையை அடிப்படையாகக்கொண்டு இறைவேண்டல் செய்யவும், தியானம் மேற்கொள்ளவும் அழைக்கப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டிலிருந்து, புதியவழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவை, "ஆண்டவரோடு 24 மணி நேர இறைவேண்டல்" என்ற பக்தி முயற்சியை, ஏற்பாடு செய்து நடத்திவருகிறது. 2015ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட தவக்காலச் செய்தியில், இந்த பக்திமுயற்சியில் கத்தோலிக்கர் அனைவரும் பங்குபெறுமாறு கேட்டுக்கொண்டார்.

26 February 2021, 15:13