Auschwitz-Birkenau வதைமுகாம் Auschwitz-Birkenau வதைமுகாம் 

யூதமத வெறுப்புக்கு எதிரான அனைத்து செயல்களும் நிறுத்தப்பட..

யூதர்களுக்கு எதிரான காழ்ப்புணர்வுகளைக் களைவதற்கு, பல்சமய உரையாடல் இன்றியமையாதது - அருள்பணி உர்பான்சிஸ்க்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

யூதமத வெறுப்புக்கு எதிரான அனைத்துவிதமான பழைய மற்றும், புதிய  செயல்பாடுகள் முடிவுக்குக் கொணரப்படவேண்டும் என்று, திருப்பீட அதிகாரி ஒருவர், OSCE எனப்படும், ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும், ஒத்துழைப்பு அமைப்பு நடத்திய கூட்டமொன்றில் வலியுறுத்தினார்.

இரண்டாம் உலகப் போரின்போது யூதஇனப்படுகொலை நடத்தப்பட்டதன் 76வது உலக நாளையொட்டி, சனவரி 28, இவ்வியாழனன்று, OSCE அமைப்பின் நிலைத்த குழு நடத்திய, கூட்டத்தில் உரையாற்றிய, அந்த அமைப்பில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப்  அருள்பணி யானுஸ் உர்பான்சிஸ்க் அவர்கள், இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

1945ம் ஆண்டில், Auschwitz-Birkenau வதைமுகாமில் வைக்கப்பட்டிருந்தவர்கள் விடுதலைசெய்யப்பட்டது, நாத்சி சர்வாதிகார அரசின் கொடூரங்கள், அச்சமூட்டும் சித்ரவதைகள் மற்றும், யூதர்கள் அழிக்கப்பட்டது ஆகியவற்றை நினைவுகூர்ந்த அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள், பல்சமய உரையாடல், மற்றும், நினைவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார்.

யூத இன ஒழிப்பு நடவடிக்கையை நினைவுகூரும் உலக நாளில், நாத்சி அரசின் மனிதமற்ற கடுங்சினத்திற்குப் பலியான, யூதரல்லாத, மற்ற மக்களையும் நினைவுகூர்கின்றோம் என்றுரைத்த, அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள்,  ஆயிரக்கணக்கான, ரோமா, மற்றும், சிந்தி சிறுபான்மை இனத்தவரும், பல்வேறு மத நம்பிக்கையாளர்களும் நாத்சி அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

அந்தச் சமயத்தில், தங்களைச் சுற்றி நடைபெற்ற பயங்கரமான கொடுமைகளுக்கு உள்ளான மக்களைக் காப்பாற்றுவதற்கு, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றியவர்களையும், இந்த உலக நாளில் நன்றியோடு நினைக்கிறோம் என்றும், அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள் கூறினார்.

யூதமதத்திற்கு எதிரான காழ்ப்புணர்வுகளைக் களைவதற்கு, பல்சமய உரையாடல் இன்றியமையாதது என்றும், அமைதி, ஒருவர் ஒருவரை மதித்தல், சமய சுதந்திரம், படைப்பைப் பாதுகாத்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு பல்சமய உரையாடலின் முக்கியத்துவம் பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரும் உடன்பிறந்தோர் (Fratelli tutti) என்ற தன் திருத்தூது மடலில் வலியுறுத்தி இருக்கின்றார் என்றும், அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள் கூறினார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2021, 15:22