காமரூன் நாட்டில்  கர்தினால் பரோலின் காமரூன் நாட்டில் கர்தினால் பரோலின்  

ஈராக் திருத்தூதுப் பயணம் கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்தும்

வளைகுடா நாடுகளில் வாழ்கின்ற கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்துவதற்காக, அப்பகுதிக்குச் செல்ல திருத்தந்தை விரும்புகிறார் - கர்தினால் பரோலின்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டிற்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம், அப்பகுதி கிறிஸ்தவர்களுக்கு ஊக்கமூட்டுவதாய் இருக்கும் என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

Kto என்ற, பிரெஞ்ச் கத்தோலிக்க தொலைக்காட்சி அலைவரிசைக்குப் பேட்டியளித்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணம், திருப்பீடத் தலைமையகத்தில் இடம்பெறும் சீர்திருத்தங்கள், சீனாவோடு, திருப்பீடம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம், கோவிட்-19 பெருந்தொற்றோடு தொடர்புடைய நலவாழ்வு பிரச்சனைகள் என்று, பல்வேறு தலைப்புக்களில் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இக்காலத்திற்கேற்றால்போல் நற்செய்தியை அறிவிக்க, சக்திகொண்டதாக தன்னை மாற்ற, திருஅவை முயற்சிசெய்து வருகின்றது என்றும், வீதிக்குச் சென்று பணியாற்றும் திருஅவையே, நற்செய்தியின் குடிநீரைப் பருகுவதற்குத் தாகம் கொண்டுள்ள இக்கால மக்களுக்கு, அந்நீரை வழங்குவதற்கு உண்மையிலேயே திறன்கொண்டது என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.    

ஈராக் திருத்தூதுப் பயணம்

வருகிற மார்ச் மாதம் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறுவதாய்த் திட்டமிடப்பட்டுள்ள, திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணம் பற்றிப் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், வளைகுடா நாடுகளில் வாழ்கின்ற கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்துவதற்காக, அப்பகுதிக்குச் செல்ல திருத்தந்தை விரும்புகிறார் என்று கூறினார்.

வளைகுடா பகுதியிலுள்ள, பல நாடுகளில் இடம்பெறும், ஆயுதமோதல்கள் மற்றும், வன்முறையால், கிறிஸ்தவர்கள் மிகவும் துன்புறுகின்றனர் என்றும், அப்பகுதியில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது என்றும், திருத்தந்தை அப்பகுதிக்குச் சென்று, கிறிஸ்தவர்கள், இன்னல்கள் மத்தியில், விசுவாசத்திற்குத் தொடர்ந்து சான்று பகர ஊக்கப்படுத்த விரும்புகிறார் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

அபு தாபியில் 2019ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி, திருத்தந்தை கையெழுத்திட்ட மனித உடன்பிறந்த உணர்வு ஏடு பற்றிய சிந்தனைகளையும், காமரூன் நாட்டில் பயணம் மேற்கொண்டுவரும், கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2021, 15:17