கர்தினால் பரோலின் கர்தினால் பரோலின் 

கர்தினால் பரோலின் - காமரூன் நாட்டில் பயணம்

மனித சமுதாயம் சந்தித்துவரும் கோவிட்-19 நெருக்கடியால் ஆப்ரிக்க கண்டம் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக, திருத்தந்தையின் அக்கறையைக் காட்டும்வண்ணம் கர்தினால் பரோலின் பயணம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 28 இவ்வியாழன் முதல், பிப்ரவரி 3, வருகிற புதன் முடிய, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஆஃப்ரிக்க கண்டத்தில் அமைந்துள்ள காமரூன் நாட்டில் ஒரு வார மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தற்போது மனித சமுதாயம் சந்தித்து வரும் கோவிட்-19 நெருக்கடியால் ஆப்ரிக்க கண்டம் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக, திருத்தந்தையின் அக்கறையைக் காட்டும்வண்ணம் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதென திருப்பீடச் செயலகம் அறிவித்துள்ளது.

ஆப்ரிக்க கண்டம் இயற்கை வளங்கள் நிறைந்ததாக இருந்தாலும், வெளிநாட்டு, மற்றும் உள்நாட்டு தலையீடுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கண்டம் என்றும், அங்கு ஒப்புரவும், அமைதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2021ம் ஆண்டின் உலக அமைதி நாளன்று விடுத்த செய்தியை நடைமுறைப்படுத்தும் பயணம் இது என்று கருதப்படுகிறது.

இந்த ஒரு வாரப் பயணத்தின்போது, கர்தினால் பரோலின் அவர்கள், காமரூன் ஆயர்களையும், அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுவார் என்றும், பாமெண்டா (Bamenda) பேராலயத்தில் நிறைவேற்றும் திருப்பலியில், பாமெண்டா உயர் மறைமாவட்டத்தின் பேராயர் Andrew Nkea Fuanya அவர்களுக்கு, பாலியம் வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், Yaoundé என்ற ஊரில், தெருவோரக் குழந்தைகள் மற்றும் இளம் கைதிகளுக்கென, இயேசு சபை அருள்பணியாளர் Yves Lescanne அவர்கள் நம்பிக்கையின் இல்லம் என்று பொருள்படும் Foyer de l'Esperance என்ற இல்லத்தை நிறுவியதன் 40ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளிலும் கர்தினால் பரோலின் அவர்கள் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2021, 15:08