அணு ஆயுதங்களை அணு ஆயுதங்களை  

அணு ஆயுதங்களற்ற உலகம் – வத்திக்கான் கருத்தரங்கு

குறிக்கோள் ஏதுமின்றி, அணு ஆயுதங்கள், அனைத்தையும் அழிக்கவல்லது என்பதால், அவற்றை இவ்வுலகிலிருந்து முற்றிலும் நீக்குவதற்கு, கத்தோலிக்கத் திருஅவை மிகத் தீவிரமாகப் போராடிவருகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அணு ஆயுதங்களை இவ்வுலகிலிருந்து அறவே ஒழிக்கவேண்டும் என்ற கருத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கத்தோலிக்கத் திருஅவை அதிகாரிகளும், மிகத் தீவிரமான நிலைப்பாடு கொண்டுள்ளனர் என்று, வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.

கோவிட்-19 கொள்ளைநோய்க்குப்பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க திருத்தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க, திருப்பீடத்தில் உருவாக்கப்பட்டுள்ள கோவிட்-19 பணிக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் Gerard Powers அவர்கள், அணு ஆயுத ஒழிப்பை மையப்படுத்தி, டிசம்பர் 16, இப்புதனன்று, வத்திக்கானில் நடைபெற்ற ஓர் இணையதள கருத்தரங்கைக் குறித்து தன் கருத்துக்களை வத்திக்கான் செய்தியுடன் பகிர்ந்துகொண்டார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில், பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறையில் பணியாற்றிவரும் அதிகாரிகளும், வத்திக்கான் உயர் அதிகாரிகளும், அணுசக்தி துறையில் பணியாற்றியுள்ள அறிஞர்களும் கலந்துகொண்டனர்.

அணு ஆயுத ஒழிப்பை மையப்படுத்தி, 2017ம் ஆண்டு வத்திக்கானில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், "அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது மட்டுமல்ல, அணு ஆயுதங்களை வைத்திருப்பதும் நன்னெறிக்குப் புறம்பானது" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய கருத்தை, மீண்டும் ஒருமுறை வலியுறுத்தும் நோக்கத்தில் இந்த இணையதள கருத்தரங்கு நடைபெற்றது.

"அணு ஆயுதங்களின் தடைகள் பற்றிய ஒப்பந்தம்" ஒன்று, 2021ம் ஆண்டு சனவரி 22ம் தேதி நிறைவேற்றப்படவிருப்பதை முன்னிட்டு, இந்த ஒப்பந்தத்தை மிகத் தீவிரமாக ஆதரிக்கும் வத்திக்கான் நாட்டில், இக்கருத்தரங்கு நடைபெற்றது என்று பேராசிரியர் Powers அவர்கள் கூறினார்.

ஆயுதங்கள் அனைத்துமே மோசமானவை என்றாலும், அணு ஆயுதங்களின் அழிக்கும் சக்தி, ஏனைய ஆயுதங்களைக் காட்டிலும் மிக அதிகம் என்பதாலும், குறிக்கோள் ஏதுமின்றி, அணு ஆயுதங்கள், அனைத்தையும் அழிக்கவல்லது என்பதாலும், அவற்றை முற்றிலும் நீக்குவதற்கு, கத்தோலிக்கத் திருஅவை, மிகத் தீவிரமாகப் போராடிவருகிறது என்று பேராசிரியர் Powers அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2020, 15:01