கோவிட்-19 தடுப்பூசி கோவிட்-19 தடுப்பூசி 

தடுப்பூசி குறித்த 20 வழிகாட்டுதல்கள்

தடுப்பூசி ஆய்வின் துவக்கம், உருவாக்கம், காப்புரிமை, இலாப நோக்கம்கொண்ட வணிகம், அங்கீகாரம், விநியோகம், நிர்வாகம் போன்றவைகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நலம் நிறைந்த ஓர் உலகை கருத்தில் கொண்டதாக, அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

கோவிட்-19 தொடர்பாக வத்திக்கானில் உருவாக்கப்பட்ட அமைப்பும், வாழ்வுக்கான திருப்பீடக் கழகமும் இணைந்து, டிசம்பர் 29, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 20 கருத்துக்களை முன்வைத்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய தடுப்பூசி பயணத்தின் பாதையில், அதாவது, ஆய்வின் துவக்கம், உருவாக்கம், காப்புரிமை, இலாப நோக்கம்கொண்ட வணிகம், அங்கீகாரம், விநியோகம், நிர்வாகம், நன்னெறிக் கடமைகள், அறிவியல் ஆய்வுகள், உலகை குணப்படுத்துவதில் திருஅவையின் பணி என, பல்வேறு தலைப்புகளின்கீழ், இந்த 20 விதிமுறைகளையும் பகுத்து ஆய்வு செய்துள்ளது, இந்த அறிக்கை.

தனிப்பட்ட மனிதர்களுக்கு என்று மட்டுமல்ல, உலகின் அனைத்து மனிதர்களின் நலனையும் பாதுகாக்கும் நோக்கம் கொண்டதாக, எவ்விதப் பாகுபாடும் இன்றி, இதன் தேவை அதிகம் இருக்கும் மக்களுக்கு இந்த தடுப்பூசிகள் முதலில் வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்துக்கிறது, வாழ்வுக்கான திருப்பீட அவை இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கை.

இந்த தடுப்பூசியை ஒரு நாட்டிற்கு என உரிமை கொண்டாடாமல், அனைத்து மக்களுக்கும் பலன்தரும் வகையில், நாடுகளுக்கிடையே ஒத்துழைப்புடன் செயல்பட, தலைவர்கள் முன்வரவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஊர்பி எத் ஓர்பி வாழ்த்துரையில் விண்ணப்பித்ததையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டி வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 December 2020, 15:01