மெக்சிகோவில், கிறிஸ்மஸ் நாளைக் கொண்டாடும் குடும்பம் மெக்சிகோவில், கிறிஸ்மஸ் நாளைக் கொண்டாடும் குடும்பம் 

Amoris laetitia திருத்தூது மடலுக்கு அர்ப்பணிக்கும் ஓராண்டு

அடிப்படை திருஅவையாக விளங்கும் குடும்பத்திற்கும், திருஅவைக்கும் இடையே நிலவும் உறவு பலப்படுத்தப்பட்டு, இன்றைய உலகின் சவால்களை எதிர்கொள்ள சக்தியை வழங்கும் நோக்கத்தில் ஆலோசனைகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வரும் மார்ச் மாதம் 19ம் தேதி, புனித யோசேப்பு திருவிழாவின்போது, Amoris laetitia திருத்தூது மடலுக்கு அர்ப்பணிக்கும் ஆண்டு துவக்கப்பட்டு, 2022ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி நிறைவுக்கு வரும் என திருப்பீடம் அறிவித்துள்ளது.

குடும்ப அன்பு, மற்றும், மகிழ்வை மையப்படுத்திய இந்த ஓராண்டு கொண்டாட்டம், 2022ம் ஆண்டு உரோம் நகரில் ஜூன் மாதம் இடம்பெறவிருக்கும் 10வது உலக குடும்ப மாநாட்டுடன் நிறைவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் குடும்ப அன்பிற்கு சான்றாக விளங்கவேண்டும் என்பதை ஊக்குவிக்க திருத்தந்தை விரும்புகிறார் என கூறும், பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வுக்குரிய திருப்பீட அவை, Amoris Laetitia ஆண்டின் நோக்கம், அவ்வாண்டிற்கென வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து வழிகாட்டுதல் ஏடு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

Amoris laetitia திருத்தூதுமடல் எடுத்துரைப்பவைகளை அனைவருடனும் பகிர்தல், திருமணம் எனும் அருளடையாளத்தின் உயரிய மதிப்பீடுகளை எடுத்துரைத்தல், குடும்ப மதிப்பீடுகளின் தூதுவர்களாக செயல்பட்டு, அன்பின் உண்மைக்கும், தன்னையே வழங்குவதற்கும் இளையோரை தயாரித்தல் போன்றவைகளில் குடும்பங்களை ஈடுபடுத்த உதவ உள்ளதாக இத்திருப்பீட அவை, தன் ஏட்டில் தெரிவிக்கிறது.

திருமண தயாரிப்பு, புதுமணத் தம்பதியர், குழந்தை வளர்ப்பு, போன்றவைகளிலும் உதவ திட்டங்களை வகுத்துள்ளதாக உரைக்கும் இத்திருப்பீட அவை, 'தூக்கியெறியும் கலாச்சாரம்', 'சமுதாய அக்கறையற்ற நிலை' போன்றவைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என, தன் புதிய ஏட்டில் கூறியுள்ளது.

அடிப்படை திருஅவையாக விளங்கும் குடும்பத்திற்கும், திருஅவைக்கும் இடையே நிலவும் உறவு பலப்படுத்தப்பட்டு, இன்றைய உலகின் சவால்களை எதிர்கொள்ள சக்தியை வழங்கும் நோக்கத்தில், ஆலோசனைகளை வழங்கும் அமைப்புக்கள், தலத்திருஅவைகளில் உருவாக்கப்படும் எனவும் எடுத்துரைக்கிறது, பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வுக்குரிய திருப்பீட அவையின் ஏடு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2020, 15:00