சிரியாவில் ஐ.நா.வின் மனிதாபிமான உதவிகள் சிரியாவில் ஐ.நா.வின் மனிதாபிமான உதவிகள் 

ஈராக், சிரியா நாடுகளின் மனிதாபிமான நெருக்கடிகளைத் தீர்க்க...

சிரியாவிலும், ஈராக்கிலும் நிலவும் நெருக்கடி நிலைகளைக் களைவதற்கு 2014ம் ஆண்டு முதல் கத்தோலிக்கத் திருஅவையின் பல்வேறு உதவி அமைப்புக்கள், இதுவரை, 100 கோடி டாலர்கள் நிதி உதவி செய்துள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகளைத் தீர்க்கும் ஒரு முயற்சியாக, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவை, டிசம்பர் 10, இவ்வியாழனன்று, கணனி வழி மெய் நிகர் கூட்டம் ஒன்றை நடத்துகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்களையும், வேறுபல திருஅவை சார்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த மெய் நிகர் கருத்தரங்கு, டிசம்பர் 10ம் தேதி, அகில உலக மனித உரிமைகள் நாளன்று, உரோம் உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் ஒரு காணொளிச் செய்தியுடன் துவங்கும் இச்சந்திப்பில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் துவக்க உரை வழங்குகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சனைகள் நடுவே பயன்படுத்தக்கூடிய அரசியல் வழிமுறைகளைக் குறித்து, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களும், சிரியாவின் திருப்பீடத் தூதர், கர்தினால் மாரியோ செனாரி அவர்களும் உரையாற்றுகின்றனர்.

அரசு சாரா நிறுவனங்களும், கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்களும், ஆற்றும் அவசரக்கால உதவிகள் குறித்தும், நீடித்த, நிலையான முன்னேற்ற முயற்சிகள் குறித்தும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்களும், அகில உலக காரித்தாஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலர், திருவாளர் அலோய்சியஸ் ஜான் அவர்களும் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

சிரியாவிலும், ஈராக்கிலும் நிலவும் நெருக்கடி நிலைகளைக் களைவதற்கு 2014ம் ஆண்டு முதல் கத்தோலிக்கத் திருஅவையின் பல்வேறு உதவி அமைப்புக்கள், இதுவரை 100 கோடி டாலர்கள் நிதி உதவி செய்துள்ளது என்பதும், இதனால், 40 இலட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 December 2020, 15:29