54வது உலக அமைதி நாள் செய்தி வெளியீட்டு ஒளிபரப்பில் பங்கேற்ற திருப்பீட அதிகாரிகள் 54வது உலக அமைதி நாள் செய்தி வெளியீட்டு ஒளிபரப்பில் பங்கேற்ற திருப்பீட அதிகாரிகள் 

54வது உலக அமைதி நாள் செய்தி வெளியீட்டு நிகழ்வு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள 54வது உலக அமைதி நாள் செய்தி, டிசம்பர் 17, இவ்வியாழனன்று, திருப்பீட செய்தித்துறை அலுவலகத்திலிருந்து, வலைத்தள நேரடி ஒளிபரப்பின் வழியே வெளியிடப்பட்டது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள 54வது உலக அமைதி நாள் செய்தி, டிசம்பர் 17, இவ்வியாழனன்று, திருப்பீட செய்தித்துறை அலுவலகத்திலிருந்து, வலைத்தள நேரடி ஒளிபரப்பின் வழியே வெளியிடப்பட்டது.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன், இத்திருப்பீட அவையின் செயலர், பேராயர் Bruno-Marie Duffé மற்றும், திருப்பீடத்தில் பணியாற்றும் முனைவர்கள் Christine Jeangey, மற்றும் Anne-Julie Kerheul ஆகியோர் இந்த வெளியீட்டு ஒளிபரப்பில் பங்கேற்றனர்.

இவ்வுலகையும், மனிதர்களையும் உருவாக்கிய இறைவனின் முதல் செயல், அன்புகூர்வதாக இருந்தது என்று, இந்த வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய கர்தினால் டர்க்சன் அவர்கள், அன்பு கூர்வதும், பேணிக்காப்பதும் இறைவனிடமிருந்து உருவானது என்பதை, விவிலியத்தின் முதல் பக்கங்களிலேயே நாம் காண்கிறோம் என்று எடுத்துரைத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இச்செய்தியில் அவர் பகிர்ந்துள்ள எட்டு கருத்துக்களை சுருக்கமாகத் தொகுத்து வழங்கிய கர்தினால் டர்க்சன் அவர்கள், பேணிக்காக்கும் கலாச்சாரத்தை வளர்க்கும் சிறந்த கருவி கல்வி என்று திருத்தந்தை கூறியதை, குடும்பம், கல்விக்கூடம், சமுதாயம், மதம் என்ற அனைத்து தளங்களிலும் நாம் நிலைநாட்ட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

கோவிட்-19 கொள்ளைநோய், நாம் ஒவ்வொருவரும் உடலிலும், உள்ளத்திலும் வலுவற்றவர்கள் என்பதை உணர்த்தியுள்ள அதே வேளையில், இந்த சமுதாயத்தின் வலுவற்ற நிலையையும் நமக்கு உணர்த்தியுள்ளது என்று, தன் உரையில் கூறிய பேராயர் Duffé அவர்கள், நம் வலுவற்ற நிலையிலிருந்து வெளியேற, அனைவரும் இணைந்து ஒருவரை ஒருவர் பேணிக்காக்க வேண்டும் என்று திருத்தந்தை கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள 54வது உலக அமைதி நாள் செய்தியில், அவரது Laudato si' மற்றும் Fratelli tutti ஆகிய திருமடல்களில் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களின் எதிரொலிகளை நாம் கேட்கமுடிகிறது என்று பேராயர் Duffé அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2020, 15:10