தேடுதல்

Vatican News
“ஆயர் மற்றும், கிறிஸ்தவ ஒன்றிப்பு” என்ற புதிய ஏடு, மெய்நிகர் செய்தியாளர் கூட்டம் “ஆயர் மற்றும், கிறிஸ்தவ ஒன்றிப்பு” என்ற புதிய ஏடு, மெய்நிகர் செய்தியாளர் கூட்டம்  

“ஆயர் மற்றும், கிறிஸ்தவ ஒன்றிப்பு” என்ற புதிய ஏடு

1960ம் ஆண்டில், திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்களால், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவை உருவாக்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கத் திருஅவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு அர்ப்பணத்தோடு தொடர்புடைய மிக முக்கியமான ஏடு ஒன்றை, கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிக்கும் திருப்பீட அவை, டிசம்பர் 04, இவ்வெள்ளியன்று, மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டது.

“ஆயர் மற்றும், கிறிஸ்தவ ஒன்றிப்பு: கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணிக்கு வழிகாட்டும் கையேடு (The Bishop and Christian Unity: An Ecumenical Vademecum)” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த ஏடு பற்றி விவரித்த கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவை, கத்தோலிக்க ஆயர்கள், தங்களது மறைப்பணி வழியாக, கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிப்பதற்கு வழிகாட்டும் நோக்கத்தில், இந்த ஏடு வெளியிடப்பட்டுள்ளது என்று அறிவித்தது.

தனது அவையின் உறுப்பினர்கள் மற்றும், ஆலோசகர்களின் விண்ணப்பத்தின்பேரில், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவை உருவாக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்த ஏடு வெளியிடப்படுகிறது என்றும், அத்திருப்பீட அவை கூறியுள்ளது.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு பற்றி வெளியிட்ட unum sint Ut (மே,25,1995) என்ற திருமடலின் 25ம் ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய மடலில், இந்த வழிகாட்டும் ஏட்டிற்கு அனுமதி அளித்தார் என்றும், இந்த ஏடு, கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிப்பதில் திருஅவைக்கு இருக்கும் பொறுப்புகளை ஊக்குவிக்கவும், அதற்கு வழிகாட்டவும் உதவும் என, அதில் கூறியிருக்கிறார் என்றும் அறிவித்துள்ளது.

இரு முக்கிய பகுதிகள்

கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணிக்கு வழிகாட்டும் இந்த ஏடு, இரு முக்கிய பகுதிகளைக் கொண்டிருக்கின்றது என்றும், “கத்தோலிக்கத் திருஅவைக்குள் கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில் முதல் பகுதியும், “பிற கிறிஸ்தவர்களோடு உள்ள உறவில் கத்தோலிக்கத் திருஅவை” என்ற தலைப்பில் இரண்டாவது பகுதியும் அமைந்துள்ளன என்றும், அத்திருப்பீட அவை கூறியுள்ளது.

ஆன்மீக கிறிஸ்தவ ஒன்றிப்பு

ஆன்மீக கிறிஸ்தவ ஒன்றிப்பு, கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கத்தின் ஆன்மாவாக அமைந்துள்ளது என்று கூறியுள்ள அத்திருப்பீட அவை, கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒன்றிப்பு இடம்பெற வேண்டும் என்பதற்காக, இறைவேண்டல், மனமாற்றம் மற்றும், புனிதத்துவம் ஆகியவற்றில் விசுவாசிகள் வளர்வதற்கு, ஆயர்கள் எவ்வாறு வழிகாட்டவேண்டும் என்பது, அந்த ஏட்டில் உள்ளது என்று கூறியுள்ளது.

குறிப்பாக, திருமறை நூல்களை வாசித்தல், கடந்தகால நினைவுகளைக் குணப்படுத்தல், கிறிஸ்தவர்கள் சிந்தும் இரத்தம் பற்றிய உணர்வு, சந்திப்பு கலாச்சாரம், உரையாடல் போன்றவை குறித்து எடுத்துரைக்கவும், இந்தக் கையோடு ஆயர்களுக்கு உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

1960ம் ஆண்டில், திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்களால், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவை உருவாக்கப்பட்டது. 

04 December 2020, 14:59