11ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாஸ்கா திருவழிபாட்டு நூல் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாஸ்கா திருவழிபாட்டு நூல் 

விசுவாசிகளின் வாழ்வில் இறைவார்த்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி, "Aperuit illis" என்ற தலைப்பில், தன் சொந்த விருப்பத்தின்பேரில் வெளியிடும், Motu proprio அறிக்கையின் வழியாக, இறைவார்த்தை ஞாயிறை உருவாக்கினார்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

2021ம் ஆண்டு சனவரி 26ம் தேதி "முதல் இறைவார்த்தை ஞாயிறு"  சிறப்பிக்கப்படுவதையொட்டி, விசுவாசிகளின் வாழ்வில் இறைவார்த்தையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஏடு ஒன்றை, திருவழிபாடு மற்றும் அருளடையாளங்கள் பேராயம், டிசம்பர் 19, இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளது.

ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் இறைவார்த்தை ஞாயிறன்று விசுவாசிகள், சில திருஅவை ஏடுகளை, குறிப்பாக, திருப்பலி வாசக நூலை மீண்டும் மீண்டும் ஆழ்ந்து படிப்பதற்கு நல்லதொரு வாய்ப்பாக அது அமைந்துள்ளது என்று அந்த ஏடு கூறியுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி, "Aperuit illis" என்ற தலைப்பில், தன் சொந்த விருப்பத்தின்பேரில் வெளியிடும், Motu proprio அறிக்கையின் வழியாக, இறைவார்த்தை ஞாயிறை உருவாக்கினார். அந்நாளில் இறைவார்த்தையை ஆழ்ந்து வாசித்து, அதை உள்வாங்கி, அதைக் கொண்டாடவேண்டும் என்று, உலகளாவிய திருஅவையை திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

திருத்தந்தை உருவாக்கியுள்ள இறைவார்த்தை ஞாயிறைக் கொண்டாடுவதற்குத் தகுதியான பத்து வழிமுறைளை அந்த ஏட்டில் வழங்கியுள்ள, திருவழிபாடு மற்றும், அருளடையாளங்கள் பேராயம், திருவழிபாட்டில் வாசிக்கப்படும் விவிலிய வாசகங்கள் வழியாக, கடவுள் தம் மக்களிடம் பேசுகிறார் மற்றும், கிறிஸ்துவே தமது நற்செய்தியை அறிவிக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது.

இறைவார்த்தை ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் திருவழிபாட்டு சடங்கில், நற்செய்தி நூல் பவனியாக எடுத்துவரப்படவேண்டும், அஞ்ஞாயிறன்று வாசக நூலில் திருஅவையால் குறிக்கப்பட்ட விவிலிய வாசகங்களே இடம்பெறவேண்டும், ஏனெனில் இந்த வாசகங்கள் வாசிக்கப்படும்போது, அவற்றுக்குச் செவிமடுக்கும் விசுவாசிகள் மத்தியில் ஒன்றிப்பு உருவாகின்றது என்று அந்த ஏட்டில் கூறப்பட்டுள்ளது.

பதிலுரைப் பாடல் பாடப்படவேண்டும் என்றும், ஆயர்கள், அருள்பணியாளர்கள், மற்றும், திருத்தொண்டர்கள், மறையுரைகளை ஆற்றும்போது, விவிலிய நூல் பற்றி விசுவாசிகளுக்குப் புரியும் முறையிலும், தங்கள் குழுமங்களுக்கு ஏற்ற முறையிலும் அவற்றை ஆற்றவேண்டும் என்றும், அந்த ஏட்டில் கூறப்பட்டுள்ளது.

இறைவார்த்தையை விசுவாசிகள் நன்றாக உள்வாங்கி தியானிப்பதற்கு உதவியாக, திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில், அமைதி காக்கப்படுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்படவேண்டும் என்றும், விசுவாசிகள் இறைவார்த்தைக்குச் செவிமடுப்பதற்கு உதவியாக, அவர்கள் ஆன்மீக அளவிலும் தயாரிக்கப்படவேண்டும், வாசகங்களை வாசிக்கும் முறை குறித்து அவற்றை வாசிப்பவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்றும், அந்த ஏடு கூறுகிறது

திருவழிபாட்டு நூல்களுக்குப் பதிலாக, அதன் துண்டுப் பிரதிகள், நகல்கள், மற்றும் ஏனைய பொருள்கள் பயன்படுத்தப்படக் கூடாது என்றும், இறைவார்த்தை ஞாயிறுக்கு முந்தைய நாள்களிலும், அதற்குப் பிறகும், பயிலரகங்கள் நடத்தி, விசுவாசிகளுக்கு ஞாயிறு மற்றும், ஒவ்வொரு நாளைய திருப்பலி வாசகங்கள் பற்றி தெளிவுபடுத்தவேண்டும் என்றும், அந்த ஏடு பரிந்துரைத்துள்ளது.

விவிலிய நூலுக்கும், திருப்புகழ்மாலை செபங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆழப்படுத்தும் நோக்கத்தில், இறைவார்த்தை ஞாயிறன்று, காலை, மாலை திருப்புகழ்மாலை செபங்கள் செபிக்கப்படவும் அந்த ஏடு பரிந்துரைத்துள்ளது.

திருவிவிலியத்தின் பெரும்பகுதியை இலத்தீனில் மொழி பெயர்த்த புனித ஜெரோம் அவர்கள் இறைபதம் அடைந்ததன் 1,600ம் ஆண்டு நிறைவு 2019ம் ஆண்டில் நினைவுகூரப்பட்டது. "மறைநூலை அறியாதவர், கிறிஸ்துவை அறியாதவர்" என்று சொல்லி, இறைவார்த்தையை மிகவும் அன்புகூர்ந்த, புனித ஜெரோம் அவர்களின் எடுத்துக்காட்டைப் பின்பற்றுவோம் என்று, அந்த ஏடு இறுதியில் கேட்டுக்கொண்டுள்ளது. அந்த ஏட்டை, திருவழிபாடு மற்றும், அருளடையாளங்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளார். 

2019ம் ஆண்டு அக்டோபர் நிலவரப்படி, 698 மொழிகளில், விவிலிய நூல் முழுவதும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதோடு, புதிய ஏற்பாடு மட்டும் 1,548 மொழிகளிலும், விவிலியத்தின் சில பகுதிகள் அல்லது கதைகள், மேலும் 1,138 மொழிகளிலும், விவிலியத்தின் சில பகுதிகள் குறைந்தது 3,385 மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2020, 15:00