புனித யோசேப்பு புனித யோசேப்பு  

புனித யோசேப்பு ஆண்டில் சிறப்பு நிறைபேறு பலன்கள்

மாண்புள்ள வேலையைத் தேடுவதில் புனித யோசேப்பின் பரிந்துரையை வேண்டுவது, புனித யோசப்பு பற்றிய திருவழிபாட்டு மரபுச் செபங்களைச் சொல்லி, துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக ஒப்புக்கொடுப்பது போன்றவற்றை கடைப்பிடித்தால், நிறைபேறு பலன்களைப் பெறலாம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

1870ம் ஆண்டில் திருத்தந்தை அருளாளர் 9ம் பயஸ் அவர்கள், புனித யோசேப்பை, உலகளாவியத் திருஅவையின் பாதுகாவலராக அறிவித்ததன் 150ம் ஆண்டை சிறப்பிப்பதற்கு உதவியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 08, இச்செவ்வாயன்று சிறப்பு நிறைபேறு பலன்களை அறிவித்துள்ளார்.

இந்த பலன்களைப் பெறுவது குறித்து அறிக்கை வெளியிட்ட, திருப்பீட பாவமன்னிப்பு சலுகை துறை, இச்செவ்வாய் முதல், 2021ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி வரை சிறப்பிக்கப்படும் இந்த யூபிலி ஆண்டில், இறைவேண்டல், நற்பணிகள் ஆகியவற்றை ஆற்றுவதன் வழியாக, விசுவாசிகள், தற்போதைய உலகம் எதிர்கொள்ளும் கடுமையான மனித மற்றும், சமுதாயத் துயரங்களிலிருந்து ஆறுதலும், விடுதலையும் பெறலாம் என்று கூறியுள்ளது.

நிறைபேறு பலன்கள்

விசுவாசிகள், தங்கள் பாவநிலையை விட்டுவிடுவதாக உறுதி எடுத்து, ஒப்புரவு அருள்அடையாளத்தைப் பெற்று, திருப்பலியில் பங்குகொண்டு திருநற்கருணை வாங்குதல் மற்றும், திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் செபித்தல் ஆகியவற்றை நிறைவேற்றுவதன் வழியாக, நற்பேறு பலன்களைப் பெறலாம் என்றும், அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த புனித யோசேப்பு யூபிலி ஆண்டில், குறைந்தது முப்பது நிமிடங்கள் நம் ஆண்டவர் கற்றுக்கொடுத்த செபத்தைத் தியானித்தல், மற்றும், புனித யோசேப்பு பற்றி தியானிப்பது உட்பட, ஒருநாள் ஆன்மீகத் தியானத்தில் பங்குகொள்தல் ஆகியவற்றைச் செய்வதன் வழியாக, நற்பேறு பலன்களைப் பெறலாம் என்றும், அந்த அறிக்கை கூறுகிறது.

இறைத்தந்தையுடன் நமக்குள்ள பிள்ளைக்குரிய உறவை மீண்டும் கண்டுணரவும், இறைவேண்டல், செவிமடுத்தல் மற்றும், கடவுளின் திட்டத்தை ஆழமாகத் தெளிந்து தேர்வு செய்தல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கவும், நம்பிக்கையின் உண்மையான மனிதராகிய புனித யோசேப்பு நமக்கு அழைப்பு விடுக்கிறார் என்று கூறியுள்ள அந்த அறிக்கை, திருஅவையின் வரலாற்றில், மீட்பரின் பாதுகாவலராகிய புனித யோசேப்பு மீதுள்ள பக்தி தொடர்ந்து வளர்க்கப்பட்டு வந்துள்ளது பற்றியும் குறிப்பிட்டுள்ளது.

திருக்குடும்பத்தோடு ஒன்றித்து, குடும்பங்களில் செபமாலை செபிப்பது, ஒவ்வொரு நாள் செயல்களையும் புனித யோசேப்பின் பாதுகாவலில் ஒப்படைப்பது, மாண்புள்ள வேலையைத் தேடுவதில் இந்தப் புனிதரின் பரிந்துரையை வேண்டுவது, புனித யோசப்பு புகழ்மாலையைச் சொல்வது, புனித யோசப்பு பற்றிய திருவழிபாட்டு மரபுச் செபங்களைச் சொல்லி, துன்புறும் திருஅவை மற்றும், எல்லாவிதமான அடக்குமுறைகளை அனுபவிக்கும் கிறிஸ்தவர்களுக்காக ஒப்புக்கொடுப்பது ஆகியவற்றை கடைப்பிடித்தாலும் இந்த பலன்களைப் பெறலாம் என்று, அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பாவமன்னிப்பு சலுகை திருப்பீட துறையின் தலைவர் கர்தினால் Piacenza Mauro  அவர்களும், அதன் செயலர் அருள்பணி Krzysztof Nykiel அவர்களும் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.

புனித கன்னி மரியாவின் அமல உற்பவம், விசுவாச பேருண்மையாக அறிவிக்கப்பட்ட நினைவு நாளான டிசம்பர் 8ம் தேதி, கன்னியான அவரின் கணவர், புனித யோசேப்பு உலகளாவியத் திருஅவையின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டார், அவ்வாறு அறிவிக்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, திருத்தந்தை அறிவித்துள்ள நிறைபேறு பலன்களைப் பெறுவதன் வழியாக, விசுவாசிகள் தங்கள் வாழ்வை உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குவாதலூப்பே அன்னை மரியா

மேலும், மெக்சிகோவில், குவாதலூப்பே அன்னை மரியா முடிசூட்டப்பட்டதன் 125ம் ஆண்டையொட்டி வழங்கப்பட்ட நிறைபேறு பலன்களின் காலஅளவை, கோவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடியின் காரணமாக, நீட்டித்திருப்பதாகவும், திருப்பீட பாவமன்னிப்பு சலுகை அலுவலகம் அறிவித்துள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2020, 15:21