தேவையில் இருப்போருடன் கிறிஸ்மஸ் கொண்டாடுங்கள்

படைப்பாற்றலுடன் கூடிய பல முயற்சிகளை எடுக்க நம்மைத் தூண்டும் கிறிஸ்மஸ் காலம், இவ்வாண்டு, தேவையில் இருப்போருடன் இணைந்து இந்த விழாவைக் கொண்டாடுவதில், நம் படைப்பாற்றலை வெளிக்கொணரட்டும் – கர்தினால் தாக்லே

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வொரு ஆண்டும், கிறிஸ்மஸ் காலம் படைப்பாற்றலுடன் கூடிய பல முயற்சிகளை எடுக்க நம்மைத் தூண்டுகிறது என்றும், ஏனைய ஆண்டுகளைவிட, இந்த ஆண்டு, தேவையில் இருப்போருடன் இணைந்து இந்த விழாவைக் கொண்டாடுவதில் நம் படைப்பாற்றல் வெளிப்படவேண்டும் என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவரும், அகில உலக காரித்தாஸ் நிறுவனத்தின் தலைவருமான கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், வத்திக்கான் செய்திக்கு வழங்கிய கிறிஸ்மஸ் கால பேட்டியில், கோவிட்19 கிருமியால் தான் பாதிக்கப்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

பிரச்சனைகள் நடுவே 'இம்மானுவேலாக'...

ஒரு கொள்ளைநோயினால், அதிகத் துயரங்களை அடைந்துள்ள இவ்வுலகில், 2020ம் ஆண்டு கிறிஸ்மஸ், எவ்வகையான நம்பிக்கையைக் கொணரமுடியும் என்று, கர்தினால் தாக்லே அவர்களிடம் முதலில் கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த கர்தினால் தாக்லே அவர்கள், முதல் கிறிஸ்மஸ் நாளன்று, குழந்தை இயேசு பிறந்த சூழலும், கொண்டாட்டத்திற்கு ஏற்ற ஒரு சூழலாக இல்லை என்றும், உரோமைய அடக்குமுறையால் துன்புற்ற இஸ்ரயேல் மக்கள் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்த வேளையில், இறைவனின் திருமகன் அந்த பிரச்சனைகள் நடுவே பிறக்கத் திருவுளம் கொண்டார் என்றும் கூறினார்.

எத்தனை துன்பங்கள் வந்தாலும், எத்தனை பிரச்சனைகள் சூழ்ந்தாலும், கடவுள் என்றும் 'இம்மானுவேலாக' நம்மோடு இருக்கிறார் என்பதே, கிறிஸ்மஸ் காலம் தரக்கூடிய நம்பிக்கை நிறைந்த செய்தி என்பதை, சுட்டிக்காட்டிய கர்தினால் தாக்லே அவர்கள், நாம் இவ்வுலகில் பெறக்கூடிய பொருள், பரிசுகள், வெற்றிகள் அனைத்தும் ஒரு நாள் மறைந்துவிடும் ஆனால், இறைவனின் உடனிருப்பு எப்போதும் தொடரும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

கொள்ளை நோயுற்றோரின் சகோதரன்

கோவிட்-19 கிருமியால் கர்தினால் தாக்லே அவர்கள் பாதிக்கப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், இந்தக் கிருமியால் தாக்கப்பட்டு அச்சம் கொண்டுள்ளவர்களுக்கு அவர் தரவிழையும் செய்தியைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இக்கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் தாக்லே அவர்கள், இந்தக் கிருமியால் நோயுற்ற அனைவருக்கும் தான் ஒரு சகோதரனாக இருப்பதை முதலில் நினைவுறுத்தியபின், எதிர்பாராத நேரத்தில் தன்னை அடைந்த இந்த கிருமியின் தாக்கம், தான் எப்போதும் தயாராக இருக்கவேண்டும் எவ்வேளையிலும் இறைவனைச் சந்திக்க தயாராக இருக்கவேண்டும் என்பதை, கற்றுத்தந்ததெனக் கூறினார்.

நாம் வாழும் ஒவ்வொரு நாளையும் முழுமையாக வாழ்வதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், செய்யக்கூடிய நற்செயல்களை நாளை செய்யலாம் என்று தள்ளிப்போடாமல் ஒவ்வொரு நாளிலும் அன்பு, கருணை, நீதி நிறைந்த செயல்களை மேற்கொள்ளவேண்டும் என்றும், கர்தினால் தாக்லே அவர்கள் கூறினார்.

கிறிஸ்மஸ், புத்தாண்டுக்கு கர்தினாலின் செய்தி

இவ்வாண்டு கிறிஸ்மஸ், மற்றும் புத்தாண்டுக்கென கர்தினால் தாக்லே அவர்கள் தரவிழையும் செய்தியைக் குறித்து கேட்கப்பட்டபோது, 2020ம் ஆண்டு கொண்டாடப்படும் கிறிஸ்மஸ், தேவையில் இருப்போரை இணைத்துக் கொண்டாடப்படும் திருநாளாக இருக்கவேண்டும் என்பதையும், வருகிற ஆண்டில் நம்மைச் சுற்றி மாற்றங்கள் நிகழவேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட்டுவிட்டு, நமக்குள் மாற்றங்களைக் கொணர முயலவேண்டும் என்பதையும் தன் சிறப்புச் செய்திகளாகக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2020, 14:58