உலகில் கிறிஸ்தவர்களின் நிலை உலகில் கிறிஸ்தவர்களின் நிலை  

அருள் அடையாளங்களும் 'அவசிய தேவைகள்'

வெறுப்பு சூழ்ந்துள்ள இன்றைய உலகில், மதங்களுக்கிடையில், வெறும் சகிப்புத்தன்மை என்ற நிலையைத் தாண்டி, உண்மையான உரையாடல் மற்றும் சந்திப்பு கலாச்சாரத்தை நாம் உருவாக்கவேண்டும் - பேராயர் காலகர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சமய சுதந்திரத்தை வளர்ப்பதற்கு, அரசுகள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளைக் குறித்து, திருப்பீடம் தன் கருத்துக்களைப் பதிவுசெய்வதில் மகிழ்ச்சியடைகிறது என்று, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத்துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் கூறினார்.

சமய சுதந்திரத்தை வளர்க்கும் முயற்சிகளை மையப்படுத்தி, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, ஒவ்வோர் ஆண்டும் ஏற்பாடு செய்துவரும் கருத்தரங்கு, இவ்வாண்டு, இணையவழி வடிவத்தில் இத்திங்களன்று நடைபெற்ற வேளையில், பேராயர் காலகர் அவர்கள் தன் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

கோவிட்-19 கொள்ளைநோயைத் தடுப்பதற்கு அரசுகள் மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளையும், அதே வேளையில், மக்கள் தங்கள் மத நம்பிக்கையை வெளிப்படுத்த விரும்பும் கூட்டு முயற்சிகளையும் எவ்வாறு பாதுகாப்பான முறையில் இணைக்க முடியும் என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும் என்று, பேராயர் காலகர் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

நோய் தடுப்பு மற்றும் நல பராமரிப்பு ஆகியவற்றை உறுதிசெய்ய விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளின் நடுவே, 'அவசிய தேவைகளை' நிறைவேற்றும் பல்வேறு துறைகளுக்கு அரசுகள் உத்தரவளிப்பதுபோல், கிறிஸ்தவர்களுக்கு, ஒப்புரவு, நோயில் பூசுதல் உட்பட பல்வேறு அருள் அடையாளங்களும் 'அவசிய தேவைகள்' என்பதை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று, பேராயர் காலகர் அவர்கள், தன் உரையில் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கொள்ளைநோய் காலத்தில், மதம், அரசியல் என்ற தளங்களில் அடிப்படைவாதிகளின் அத்துமீறிய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் காலகர் அவர்கள், 'நாம்', 'மற்றவர்கள்' என்ற பாகுபாட்டை வளர்க்கும் போக்குகள், இவ்வுலகை பெருமளவு சிதைத்துள்ளன என்ற கவலையை வெளியிட்டார்.

இத்தகைய வெறுப்பு சூழ்ந்துள்ள வேளையில், மதங்களுக்கிடையிலும், அரசியல் பாகுபாடுகளுக்கிடையிலும், வெறும் சகிப்புத்தன்மை என்ற நிலையைத் தாண்டி, உண்மையான உரையாடல் மற்றும் சந்திப்பு கலாச்சாரத்தை நாம் உருவாக்கவேண்டும் என்று பேராயர் காலகர் அவர்கள் அழைப்புவிடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 November 2020, 14:14