அருள்பணி Janusz Urbańczyk அருள்பணி Janusz Urbańczyk  

சமத்துவமின்மையை சமாளிக்க புரிந்துணர்வு அணுகுமுறை

பொருளாதார விதிமுறைகள் சில, நல்லதொரு வளர்ச்சிக்கு உறுதியளித்துள்ளன, ஆனால் அவை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்கு உதவவில்லை – திருப்பீட அதிகாரி அருள்பணி Urbańczyk

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் தொடர்ந்து உருவாக்கிவரும் நெருக்கடிநிலையால், வறுமை, புதிய வடிவங்களில் நிலவுகின்றது என்றும், இக்காலக்கட்டத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்களைச் சந்திப்பதற்கு, ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்படுகின்றது என்றும், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.   

OSCE எனப்படும், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும், ஒத்துழைப்பு அமைப்பில், திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும், அருள்பணி Janusz Urbańczyk அவர்கள், “நீடித்த நிலையான பொருளாதார வளர்ச்சி வழியாக, OSCE அமைப்பின் மத்தியதரைக்கடல் பகுதியின் பாதுகாப்பை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில் அந்த அமைப்பு நடத்திய கூட்டத்தில், நவம்பர் 03, இச்செவ்வாயன்று உரையாற்றியவேளையில், இவ்வாறு கூறினார்.

மனித வாழ்வின் புனிதத்தைக் காக்கவேண்டிய சவாலையும், இந்த அமைப்பு எதிர்கொள்கின்றது என்று கூறிய அருள்பணி Urbańczyk அவர்கள், பாதுகாப்பு, காலநிலை மாற்றம், மக்களின் புலம்பெயர்வு, கோவிட்-19ஆல் உருவாகியுள்ள பொருளாதார மற்றும், நிதி நெருக்கடி ஆகிய சவால்களை எதிர்கொள்வதற்கு, பரந்துபட்ட அளவில் புரிந்துணர்வு அவசியம் என்றும் கூறினார்.

பலநேரங்களில், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வைத்தே, அதன் முன்னேற்றம் அளவிடப்படுகின்றது, எனினும், முன்னேற்றம் என்பது, பொருளாதார வளர்ச்சியை வைத்து மட்டும் கணிக்கப்படக் கூடாது என்றுரைத்த அருள்பணி Urbańczyk அவர்கள், ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது, ஒவ்வொரு மனிதரின் மற்றும், அனைத்து மனிதரின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதில் அடங்கியுள்ளது என்று கூறினார்.   

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம்

அனைவரும் உடன்பிறந்தோர் (Fratelli tutti) என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருமடலின் முக்கிய கூறுகள் பற்றியும் குறிப்பிட்டுப் பேசிய அருள்பணி Urbańczyk அவர்கள், சில பொருளாதார விதிமுறைகள் சிறந்த வளர்ச்சிக்கு உறுதியளித்துள்ளன, ஆனால் அவை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்கு உதவவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

செல்வம், சமத்துவமின்மையோடு அதிகரித்துள்ளதால், அது வறுமையின் புதிய வடிவங்கள் உருவாக வழியமைத்துள்ளது என்றும் கூறிய அருள்பணி Urbańczyk அவர்கள், கோவிட்-19 கொள்ளைநோயின் எதிர்விளைவால், பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும், அவர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது என்றும் கவலை தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2020, 15:54