“பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” - கணணி வழி கூட்டம் “பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” - கணணி வழி கூட்டம்  

“பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” - இளையோருக்கு சவால்

கொள்ளைநோயைத் தொடர்ந்து வரும் காலத்தில் நம் சமுதாயமும், பொருளாதாரமும் செல்லவேண்டிய வழிகளைச் சிந்திக்க “பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” என்ற கருத்தரங்கு பெரும் உதவியாக இருக்கும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

“பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” என்ற தலைப்பில், இளம் பொருளாதார வல்லுனர்கள், மற்றும், தொழில்முனைவோருக்கென, நவம்பர் 19, இவ்வியாழன் முதல், 21, சனிக்கிழமை முடிய, இத்தாலியின் அசிசி நகரில் நடைபெறும் கணணி வழி கூட்டம் பற்றி, இக்கருத்தரங்கை ஒருங்கிணைப்போரில் ஒருவரான Valentina Rotondi அவர்கள், வத்திக்கான் செய்தியிடம் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இக்கருத்தரங்கில், சிறு சேமிப்பு என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பங்களாதேஷ் நாட்டில் கிரமீன் வங்கி என்ற அமைப்பை உருவாக்கி, 2006ம் ஆண்டு நொபெல் அமைதி விருதைப் பெற்ற முகம்மது யூனுஸ் அவர்கள் ஒரு முக்கிய பேச்சாளர் என்பதை Rotondi அவர்கள் கூறினார்.

அதே வண்ணம், பொருளாதாரம், மக்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் Vandana Shiva, Jeffrey Sachs, Juan Camilo Cardenas ஆகியோர் உட்பட, இன்னும் பல பொருளாதாரத்துறை அறிஞர்கள், இக்கருத்தரங்கில் பங்கேற்பது குறித்து, Rotondi அவர்கள் எடுத்துரைத்தார்.

சமூகவியல், மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் முனைவர் பட்டம் பெற்றுள்ள Rotondi அவர்கள், “பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” என்ற இந்த முயற்சியை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததை ஒரு பெரும் வரம் என்று கூறினார்.

பொருளாதாரம், சமுதாயம் ஆகியவற்றைக் குறித்து நாம் சிந்திக்க, குறிப்பாக, இந்தக் கொள்ளைநோயைத் தொடர்ந்து வரும் காலத்தில் நம் சமுதாயமும், பொருளாதாரமும் செல்லவேண்டிய வழிகளைச் சிந்திக்க “பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” என்ற கருத்தரங்கு பெரும் உதவியாக இருக்கும் என்று Rotondi அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இளையோர் தங்கள் அறிவுத்திறனையும், ஆர்வத்தையும், நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க பயன்படுத்தவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துவரும் அழைப்பு, இன்றைய இளையோருக்கு விழிப்புணர்வை ஊட்டும் என்று தான் நம்புவதாக, Rotondi அவர்கள் தன் பேட்டியில் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 November 2020, 14:54