தேடுதல்

சோஃபியா பல்கலைக்கழகத்தில்  திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம்) சோஃபியா பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம்) 

சோஃபியா பல்கலைக்கழக மெய்நிகர் கருத்தரங்கில் கர்தினால் செர்னி

புறக்கணிக்கப்பட்டோர், குடிபெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர் போன்றோரை தாராளமனதுடன் வரவேற்பது உட்பட, வருங்காலத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பு, இளையோரின் கரங்களில் உள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜப்பானின் டோக்கியோ நகரில், இயேசு சபையினரால் நடத்தப்படும் சோஃபியா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த மெய்நிகர் கருத்தரங்கில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின், புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் துறையின் நேரடிச் செயலர், கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள், “கோவிட்-19, புலம்பெயர்ந்தோர், மற்றும், குடிபெயர்ந்தோர் மற்றும், புதிய தலைமுறையின் பதிலுறுப்பு” என்ற தலைப்பில், நவம்பர் 27, இவ்வெள்ளியன்று உரையாற்றினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி சோஃபியா பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டதை மகிழ்வோடும், நன்றியோடும் நினைவுகூர்வதாக உரைத்த கர்தினால் செர்னி அவர்கள், தற்போதைய கொள்ளைநோய் காலத்தில், புலம்பெயர்ந்தோர் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு, புதிய தலைமுறைகள் எவ்வாறு பதில்சொல்ல முடியும் என்பது பற்றிய சிந்தனைகளை வழங்கவுள்ளதாகத் தன் உரையை ஆரம்பித்தார்.

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் எதிர்கொள்ளும் நெருக்கடிநிலைகளைக் களைவது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதை, தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட, கர்தினால் செர்னி அவர்கள், தன்னலத்திற்கும் மேலாக, பொது நலனை முன்னிறுத்தவேண்டும் என்று கூறினார்.

இளையோர், சிறந்ததோர் உலகை அமைப்பதற்கு மிகவும் ஆவல்கொண்டிருப்பதை அறிகிறேன் என்றுரைத்த கர்தினால் செர்னி அவர்கள், தற்போது உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கானத் தீர்வுகளை, கிறிஸ்தவப் பாரம்பரிய போதனைகள் மற்றும், திருத்தந்தையின், அனைவரும் உடன்பிறந்தோர் என்ற திருமடலில் காணலாம் என்று கூறினார். 

புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர், மற்றும், நம்மைவிட வேறுபட்டிருப்பவர்கள் மீது இளையோர் திறந்தமனம் கொண்டிருப்பதற்கு அழைக்கப்படுகின்றனர் என்றுரைத்த கர்தினால் செர்னி அவர்கள், புறக்கணிக்கப்பட்டோர், குடிபெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர் போன்றோரை தாராளமனதுடன் வரவேற்பது உட்பட, வருங்காலத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பு இளையோரின் கரங்களில் உள்ளது, இந்த சவாலை ஏற்கத் தயாரா? என்று திருத்தந்தை தனது திருமடலில் கூறியிருப்பதை, தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

புறக்கணிப்பு, தனிமனிதக்கோட்பாடு ஆகிய அழிவைக்கொணரும் கருத்தியல்களைப் புறக்கணிக்கவேண்டும், பிரிவினைகளை ஊக்குவிக்கக்கூடாது, வெளிவேடக்காரர்களாக வாழக்கூடாது, பேராசை, இலாபத்தின்மீது தாகம், கணநேர மனநிறைவு போன்றவற்றை அடிப்படையாக வைத்து அமைக்கப்படும் பொருளாதாரத்தை புறக்கணிக்கவேண்டும், தொழில்நுட்பத்தை வைத்து தீர்வுகாண்பதை விடுத்து, மனிதர் மையப்படுத்தப்பட வேண்டும் போன்ற திருத்தந்தை அறிவித்துள்ள பரிந்துரைகளையும், கர்தினால் செர்னி அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2020, 14:37