தேடுதல்

ஆப்கானிஸ்தான் புலம்பெயர்ந்தோர் முகாமில் குழந்தைகள் ஆப்கானிஸ்தான் புலம்பெயர்ந்தோர் முகாமில் குழந்தைகள் 

கொள்ளைநோய் விதிமுறைகளால் புலம்பெயர்ந்தோர்...

புலம்பெயர்ந்த சிறாரின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்துள்ளது, இவர்களில் பலர் தங்கள் குடும்பங்களைவிட்டு பிரிந்துள்ளனர், இது குறித்து திருப்பீடம் மிகுந்த கவலையடைந்துள்ளது - பேராயர் யூர்க்கோவிச்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா கொள்ளைநோய் தொடர்பான விதிமுறைகள், புலம்பெயர்ந்தோரிடம் முரண்பட்ட ஓர் அணுகுமுறையை உருவாக்கியுள்ளன என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைப்பு ஒன்றில், நவம்பர் 26, இவ்வியாழனன்று கூறினார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.நிறுவனத்தின் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்றுவரும், பேராயர் இவான் யூர்க்கோவிச் அவர்கள், அந்நகரில் அமைந்துள்ள புலம்பெயர்ந்தோர் உலக அமைப்பு நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய வேளையில் இவ்வாறு கூறினார்.

கொள்ளைநோய் காலத்தில், பணியிடங்களில் ஏற்படும் ஆள்பற்றாக்குறைவைச் சரிசெய்வதற்குப் புலம்பெயர்ந்தோர் அதிகமாகவே வரவேற்கப்படுகின்றனர், அதேநேரம், அவர்களை ஏற்கும் சமுதாயங்களின் கோபத்திற்கும் உள்ளாகின்றனர் என்பது கவலை தருகின்றது என்று, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் குறிப்பிட்டார்.

புலம்பெயர்ந்தோர், தாங்கள் பணிபுரியும் மையங்களில், பயன்படுத்தப்படும் பொருளாக நோக்கப்படுகின்றனர் என்றுரைத்த பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், “அனைவரும் உடன்பிறந்தோர் (Fratelli tutti)” என்ற தனது திருமடலில், புலம்பெயர்ந்தோர், சமுதாயத்திற்குக் கொடையாக இருக்கமுடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார் என்பதை நினைவுறுத்தினார். 

புலம்பெயர்ந்த சிறாரின் எண்ணிக்கை, அண்மையில் அதிகரித்துள்ளது என்றும், இவர்களில் பலர் தங்கள் குடும்பங்களைவிட்டு பிரிந்துள்ளனர் என்றும் கூறிய பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், இது குறித்து திருப்பீடம் மிகுந்த கவலையடைந்துள்ளது என்றும், இந்நிலை, உலகளாவிய சமுதாயத்திற்கு எச்சரிக்கை மணியாக உள்ளது என்றும் கூறினார்.

எல்லாக் காலங்களிலும், எல்லா நிலைகளிலும், புலம்பெயர்ந்த சிறார் நலனில் மிகுந்த அக்கறை காட்டும் கொள்கைகளை அரசுகள் கொண்டிருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும், நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்தோரின் நலவாழ்வில் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் முக்கியம் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2020, 14:31