வயது முதிர்ந்தோருடன் வயது முதிர்ந்தோருடன்  

வயது முதிர்ந்தோருடன் அன்பைப் பகிர்ந்துகொள்ளுங்கள்

அன்பு இளையோரே, உங்களுக்கு, வயது முதிர்ந்தோரின் ஞானமும், கண்ணோட்டமும் தேவைப்படுகின்றன, உங்கள் மனங்களை வியப்படையச் செய்கின்ற மற்றும், உங்கள் இதயங்களை நிரப்புகின்ற காரியங்கள் பற்றி அவர்கள் பேசுவார்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்மஸ் காலம் நெருங்கிவருகின்றவேளை, தாத்தா பாட்டிகள் மற்றும், வயது முதிர்ந்தோர் மறக்கப்பட்டுவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி, பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவை, காணொளிச் செய்தி ஒன்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டுள்ளது.

"ஞானத்தின் கொடை, கிறிஸ்மஸ் காலத்தில் தாத்தா பாட்டிகள் மற்றும், வயது முதிர்ந்தோருக்குச் செவிமடுப்போம்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அச்செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 32வது இளையோர் உலக நாளையொட்டி எழுதிய மடலிலிருந்து மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் நெருங்கி வருகிறது, இயேசு நம் குடும்பங்களில் பிறக்கிறார் என்று கூறியுள்ள அத்திருப்பீட அவை, கோவிட்-19 காலத்தில் வயது முதிர்ந்தோர் பலர், தனிமையில் வாழ்ந்துவருகின்றனர், அவர்களோடு ஒரு பிணைப்பை உருவாக்கி, அவர்களுக்கு தங்கள் அன்பையும், பாசம்நிறைந்த முத்தங்களையும் அனுப்புமாறு, உலகெங்கும் வாழ்கின்ற இளையோர் மற்றும், சிறாருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

“வயதுமுதிர்ந்தோர் உங்களது தாத்தா பாட்டிகள்” என்ற தலைப்பில் தொடங்கப்பட்ட இணையதள நடவடிக்கையில், ஏராளமான இளையோர் தங்களது தாத்தா பாட்டிகள் மற்றும், தத்து தாத்தா பாட்டிகளுக்கு இணையதளம் வழியாக தங்கள் அன்பைப் பகிர்ந்துகொண்டுள்ளதன் தொடர்ச்சியாக, கிறிஸ்மஸ் காலத்தில் புதிய முயற்சி ஒன்றையும், இத்திருப்பீட அவை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

வயது முதிர்ந்தோருக்கு அன்புநிறைந்த செய்தி ஒன்றை அனுப்புங்கள், காணொளி வழியாகவும், தொலைப்பேசி வழியாகவும், அவர்களை அழைத்து உரையாடுங்கள், அதற்குப் பரிசாக, நீங்கள், ஞானம் எனும் கொடையைப் பெறுவீர்கள் என்று, ஞானத்தின் ஒரு கொடை என்ற ஹாஷ்டாக்குடன், அனைத்து சிறுவர், சிறுமிகளுக்கு, பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவை அழைப்பு விடுத்துள்ளது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2020, 14:51