2023ம் ஆண்டு  இளையோர் உலக நாள் இலச்சனை 2023ம் ஆண்டு இளையோர் உலக நாள் இலச்சனை 

மரியா, திருச்சிலுவை, இளையோர் உலக நாள் இலச்சனை

மரியா, கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்குத் தயாராக இருந்ததுபோல், இளையோரும் அவ்வாறு வாழ்ந்து, தங்களின் கனவுகள், ஆர்வங்கள், நம்பிக்கைகள், மனத்தாராளம் ஆகியவற்றைப் புதுப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், போர்த்துக்கல் நாட்டு லிஸ்பன் நகரில் நடைபெறவிருக்கும் கத்தோலிக்க இளையோர் உலக நாளுக்கென, பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவை, இணையதளம் ஒன்றைத் திறந்துள்ளதோடு, அந்த உலக நாளின் இலச்சனையையும் வெளியிட்டுள்ளது.

இளையோர் உலக நாளை உருவாக்கிய, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள்  திருஅவையின் தலைமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்டோபர் 16, இவ்வெள்ளியன்று, 2023ம் ஆண்டின் இளையோர் உலக நாள் இலச்சனையை, இந்த திருப்பீட அவை அறிவித்துள்ளது.

இந்த இலச்சனையை வடிவமைப்பது குறித்து நடத்தப்பட்ட போட்டியில், முப்பது நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான இளையோர் கலந்துகொண்டனர் என்றும், லிஸ்பன் நகரில் சமூகத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றும் 24 வயது நிரம்பிய Beatriz Roque Antunes அவர்கள் வடிவமைத்திருந்த இலச்சனையே, போட்டியில் வெற்றிபெற்றது என்றும், இத்திருப்பீட அவை கூறியுள்ளது.

இந்த உலக நாளுக்கு, திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ள, “மரியா புறப்பட்டு யூதேயா விரைந்து சென்றார்” (லூக்.1,39)  என்ற லூக்கா நற்செய்தி வரியை மையப்படுத்தி, அன்னை மரியா, மற்றும், திருச்சிலுவையோடு இந்த இலச்சனை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மரியா, கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்குத் தயாராக இருந்ததுபோல், இளையோரும் அவ்வாறு வாழ்ந்து, தங்களின் கனவுகள், ஆர்வங்கள், நம்பிக்கைகள், மனத்தாராளம் ஆகியவற்றைப் புதுப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றனர் (கிறிஸ்து வாழ்கிறார் 20) என்று, இத்திருப்பீட அவை கூறியது.

லிஸ்பனில் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறுவதாய் திட்டமிடப்பட்டிருந்த இளையோர் உலக நாள், கொரோனா கொள்ளைநோய் பரவல் காரணமாக, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இளையோர் உலக நாள், 1985ம் ஆண்டில், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2020, 15:09