புனித பேதுரு வளாகத்தில், கிறிஸ்மஸ் குடில், மரம் புனித பேதுரு வளாகத்தில், கிறிஸ்மஸ் குடில், மரம்  

டிசம்பர் 11ல் புனித பேதுரு வளாகத்தில், கிறிஸ்மஸ் குடில், மரம்

வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் வருகிற டிசம்பர் 11ம் தேதி வைக்கப்படும் கிறிஸ்மஸ் குடிலும், கிறிஸ்மஸ் மரமும், 2021ம் ஆண்டு சனவரி மாதம் 10ம் தேதி, நம் ஆண்டவரின் திருமுழுக்கு விழா வரை வைக்கப்பட்டிருக்கும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், கிறிஸ்மஸ் குடில் மற்றும், கிறிஸ்மஸ் மரம் ஆகியவை, வருகிற டிசம்பர் 11ம் தேதி பொது மக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் வைக்கப்படும் கிறிஸ்மஸ் குடில் மற்றும், கிறிஸ்மஸ் மரம் ஆகியவை, மற்ற ஆண்டுகளைவிட இந்த ஆண்டு மிகுந்த முக்கியத்துவம் பெற்றவை என்றும், துன்பம்நிறைந்த இந்த கொரோனா கொள்ளைநோய் காலத்திலும், கிறிஸ்மஸ் உணர்வை நிலைநிறுத்துவதற்கு, வத்திக்கான் பணியாற்றி வருகின்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இயேசு, தம் மக்களைக் காப்பாற்றவும், அவர்களுக்கு ஆறுதலளிக்கவும், அவர் தம் மக்கள் மத்தியில் வருவார் என்ற நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு மற்றும், விழிப்புணர்வை உருவாக்குவது, இந்த கொள்ளைநோய் காலத்தில் இன்றியமையாதது என்றும், வத்திக்கான் கூறியுள்ளது.

வருகிற டிசம்பர் 11ம் தேதி, உரோம் நேரம் மாலை 4.30 மணிக்கு, கோவிட்-19 கொள்ளைநோய் விதிமுறைகளுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸ் குடில் திறந்து வைக்கப்படும். 16ம் நூற்றாண்டிலிருந்து, வெண்களிமண் பொருள்கள் செய்வதில் புகழ்பெற்ற இத்தாலியின் Castelli நகர், இந்த குடிலை நன்கொடையாக வழங்குகிறது. மேலும், 28 மீட்டர் உயரமுடைய கிறிஸ்மஸ் மரத்தை, சுலோவேனியா நாட்டின் Kočevje நகர், நன்கொடையாக வழங்குகிறது.

வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் வைக்கப்படும் கிறிஸ்மஸ் குடிலும், கிறிஸ்மஸ் மரமும், 2021ம் ஆண்டு சனவரி மாதம் 10ம் தேதி, நம் ஆண்டவரின் திருமுழுக்கு விழா வரை வைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவிலேயே மிக உயரமான ஊசியிலை மரம், சுலோவேனியா நாட்டின் Pohorje massif என்ற இடத்தில் உள்ளது. இந்த மரத்தின் உயரம் 61.80 மீட்டராகும். ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் பழமையுடைய இந்த மரம், மூன்று மீட்டர் மற்றும், 54 சென்டி மீட்டர் சுற்றளவையும், ஒரு மீட்டருக்கு அதிகமான விட்டத்தையும் கொண்டிருக்கிறது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2020, 13:35