ஐரோப்பிய பாராளுமன்றத்தில்  திருத்தந்தை பிரான்சிஸ் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  

கர்தினால் பரோலின்: கிறிஸ்தவர்கள் ஐரோப்பாவின் ஆன்மா

கோவிட்-19 கொள்ளைநோய் சூழலில், நம்பிக்கை, ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும், எதிர்நோக்கு ஆகிய செய்திகளை வழங்கவும், தன் மறைப்பணியை மிகுந்த ஆர்வத்துடன் ஆற்றவும் ஐரோப்பியத் திருஅவை அழைக்கப்பட்டுள்ளது - கர்தினால் பரோலின்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு நடத்திய ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில், அக்டோபர் 30, இவ்வெள்ளியன்று உரையாற்றிய, திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தில் திருஅவையின் பங்கு பற்றியும், உண்மையான கிறிஸ்தவச் சான்றை வழங்குவதற்கு, ஆயர் பேரவைகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டிய முக்கிய துறைகள் பற்றியும் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.   

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு உருவானதன் நாற்பதாம் ஆண்டு நிறைவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்கு அனுப்பிய நீண்டதொரு மடல், அந்த கூட்டமைப்பிற்கு திருத்தந்தை வழங்கியுள்ள நல்வாழ்த்துக்கள் மற்றும், ஆசீர் ஆகியவை பற்றியும் குறிப்பிட்டு, உரையாற்றினார், கர்தினால் பரோலின். திருஅவை, திருத்தந்தையர், ஐரோப்பிய ஒன்றிணைப்பு

தற்போதைய கொள்ளைநோயால், நலவாழ்வு, பொருளாதாரம் மற்றும், சமுதாய அளவில், பல நாடுகள் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டு, நிச்சயமற்ற மற்றும், இன்னலான ஒரு காலக்கட்டத்தில் வாழ்ந்து வருவது பற்றி குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், இத்தகைய சூழலில், ஐரோப்பியத் திருஅவை, தன் மறைப்பணியை மிகுந்த ஆர்வத்துடன் ஆற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளது என்றும், நம்பிக்கை, ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும், எதிர்நோக்கு ஆகிய செய்திகளை வழங்கவேண்டும் என்றும் கூறினார்.

ஒன்றிப்பு, அமைதி, தேசியவாதத்தை ஒதுக்குதல் போன்ற திட்டங்களுடன், 1950ம் ஆண்டில் ஐரோப்பாவை ஒன்றிணைப்பதற்கு முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன என்றும், இவை திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களின் காலத்தில் தொடங்கப்பட்டன என்றும், இந்த முயற்சிக்கு கத்தோலிக்கத் திருஅவை தொடர்ந்து தன் ஆதரவை வழங்கி வந்தது என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

திருத்தந்தையர்கள் புனித 6ம் பவுல், 2ம் யோவான் பவுல் ஆகியோர் ஐரோப்பாவின் பாதுகாவலர்களை அறிவித்தனர் என்றும், 1988ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்களும், 2014ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றினர் என்றும் குறிப்பிட்டார், கர்தினால் பரோலின்.

திருஅவையின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றில், அதன் தலைமைப் பணியில், ஐரோப்பியர் அல்லாத ஒருவராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  பணியாற்றுவதையும் கர்தினால் பரோலின் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஐரோப்பா குறித்த கனவுகள் பற்றியும், எவருமே தனியாக மீட்கப்பட முடியாது என்பது பற்றியும், ஐரோப்பாவில் கிறிஸ்தவச் சான்றுக்கு வழிமுறைகள் என்ன என்பது பற்றியும், புலம்பெயர்ந்தோரை வரவேற்கவேண்டியது பற்றியும் கர்தினால் பரோலின் அவர்கள் உரையாற்றினார்.

கி.பி.741ம் ஆண்டில், சிரியாவில் பிறந்த திருத்தந்தை 3ம் கிரகரி அவர்கள் திருஅவையில் தலைமைப் பணியாற்றினார். பத்து ஆண்டுகளில் இவரது பணிக்காலம் நிறுவுற்றது. அதற்கு, 1272 ஆண்டுகளுக்குப்பின், அர்ஜென்டினா நாட்டில் பிறந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் தலைமைப் பணியாற்றி வருகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2020, 13:31