பேராயர் யூர்க்கோவிச் பேராயர் யூர்க்கோவிச்  

வர்த்தகங்களைக் கட்டுப்படுத்தும் மனித உரிமை சட்டங்கள்

தற்போதைய கொள்ளைநோய், மனிதர்களின் சக்தியற்ற நிலையையும், மனித சமுதாயத்தில் இயங்கிவரும் பொருளாதாரம், நலவாழ்வு பராமரிப்பு, மற்றும் மனிதரின் வாழ்வு முறை ஆகியவை குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது - பேராயர் யூர்க்கோவிச்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களையும், ஏனைய வர்த்தக முயற்சிகளையும் சட்டங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வகையில், பன்னாட்டு மனித உரிமைகள் சட்டம் உருவாக்கப்படுவதை, திருப்பீடம் பெரிதும் விரும்புகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. நிறுவனத்தில் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.நிறுவனத்தின் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்றுவரும், பேராயர் இவான் யூர்க்கோவிச் அவர்கள், வர்த்தக உலகின் செயல்பாடுகள், மனித உரிமைகளை மனதில்கொண்டு செயல்படவேண்டும் என்று, அழைப்பு விடுத்தார்.

‘மனித உரிமைகளை மதிக்கும் பன்னாட்டு நிறுவனங்களும், ஏனைய வர்த்தக முயற்சிகளும்’ என்ற தலைப்பில் ஜெனீவாவில் நடைபெற்ற கருத்தரங்கில், அக்டோபர் 26, இத்திங்களன்று பேசிய பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் இவ்வாறு கூறினார்.

தற்போது உலகெங்கும் பரவியுள்ள கொள்ளைநோய், மனிதர்களின் சக்தியற்ற நிலையையும், மனித சமுதாயத்தில் இயங்கிவரும் பொருளாதாரம், நலவாழ்வு பராமரிப்பு, மற்றும் மனிதரின் வாழ்வு முறை ஆகியவை குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது என்று பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

இந்தக் கொள்ளைநோய் காலத்தில் எடுக்கப்படும் அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தகம் தொடர்பான முடிவுகள், மனித குடும்பத்தை வாழவைப்பதற்கு உதவியாக இருக்கும் நீடித்தத் தீர்வுகளைக் கொணரவேண்டும் என்று, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் விண்ணப்பித்தார்.

இலாபத்தை மட்டுமே இலக்காகக்கொண்டு செயல்படும் பொருளாதாரமும், சுற்றுச்சூழலைச் சுரண்டும் வர்த்தகமும் வருங்கால தலைமுறையினருக்கு நாம் செய்யக்கூடிய அநீதி என்பதை உணர்ந்து, நம் பொருளாதாரமும், வர்த்தகமும் நன்னெறியையும், மனித உரிமைகளையும் மையமாகக் கொண்டு செயல்படவேண்டும் என்று பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 October 2020, 14:18