“ஊக்குவிப்பதற்காக ஈடுபாடு கொள்தல்”: புலம்பெயர்ந்தவர்களுக்கு பணி

ஏழ்மையின் காரணமாக, எனது அன்னை, ஒரு கத்தோலிக்க ஆலயத்திற்கு அருகில் இருந்த மாணவர் விடுதி ஒன்றில் என்னை சேர்த்துவிட்டார், இதுவே நான் ஓர் அருள்பணியாளராக உதவியது - அருள்பணி நோயெல்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இம்மாதம் 27ம் தேதி, புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் 106வது உலக நாள்   கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, தொடர் காணொளிகளை வெளியிட்டுவரும் புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் பணிக்குழு, தன் ஐந்தாவது  காணொளியை, “ஊக்குவிப்பதற்காக ஈடுபாடு கொள்தல்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் தருப்பீட அவையின் ஓர் அங்கமாக விளங்கும், இப்பணிக்குழு வெளியிட்டுள்ள இந்த ஐந்தாவது காணொளியில், புலம்பெயர்ந்த மனிதர் என்ற முறையில், தனது குழந்தைப் பருவத்தில், அனைத்தையும் இழந்த அனுபவம் குறித்த சிந்தனைகளை, அருள்பணி நோயெல் அவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளார்.

புலம்பெயர்ந்தவராக வாழ்ந்த காலக்கட்டத்தில் நான் எல்லாவற்றையும், அதாவது, உறவுகள், வாழ்வாதாரங்கள், பள்ளி, நட்பு... போன்ற அனைத்தையும் இழந்திருந்தேன் என்று பகிர்ந்துகொண்டுள்ள அருள்பணி நோயெல் அவர்கள், நாங்கள் அனைத்தையும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருந்தது என்று கூறியுள்ளார்.

வறுமை

வறுமை காரணமாக, மற்ற சிறாருக்கு கிடைத்த அதே வாய்ப்புக்களைப் பெற இயலாமல் இருந்தது என்றும், மற்ற சிறார் விளையாடியபோது, குழிப்பந்தாட்ட விளையாட்டு மைதானத்தில், வாழ்வுக்காக, பந்துகளை பொறுக்கும் வேலை செய்தேன் என்றும் உரைத்த அருள்பணி நோயெல் அவர்கள், இந்த கடின வாழ்வைத் திரும்பிப் பார்க்கையில், இது எனது அருள்பணித்துவ அழைப்பின் ஒரு பகுதியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

ஏழ்மையால் எனது அன்னை, ஒரு கத்தோலிக்க ஆலயத்திற்கு அருகில் இருந்த மாணவர் விடுதி ஒன்றில் என்னை சேர்த்துவிட்டார், இதுவே நான் ஓர் அருள்பணியாளராக உதவியது என்றும், இப்போதைய அருள்பணித்துவ வாழ்வில், புலம்பெயர்ந்தவர்களின் சூழலை, மற்றவர்களைவிட என்னால் அதிகம் புரிந்துகொள்ள முடிகிறது என்றும், அருள்பணி நோயெல் அவர்கள் கூறியுள்ளார்.

“இயேசு கிறிஸ்து போன்று கட்டாயமாக இடம்பெயர”

புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் 106வது உலக நாளில், நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கப்படவேண்டிய மேய்ப்புப்பணி வலியுறுத்தப்படுகின்றது. “இயேசு கிறிஸ்து போன்று கட்டாயமாக இடம்பெயர” என்ற தலைப்பில் இந்த 106வது உலக நாளுக்கென்று செய்தி வெளியிட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு, குழந்தையாக இருந்த காலக்கட்டத்தில், அவரின் மற்றும், அவரது பெற்றோரின் அனுபவங்கள் குறித்த சிந்தனைகளை வழங்கியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2020, 14:48