தேடுதல்

அருள்பணி ரொபெர்த்தோ மால்ஜெஸீனிக்கு  இறுதி வழியனுப்பு நிகழ்வு அருள்பணி ரொபெர்த்தோ மால்ஜெஸீனிக்கு இறுதி வழியனுப்பு நிகழ்வு 

அன்புக்கு ஒருபோதும் இறப்பில்லை, கர்தினால் Krajewski

கர்தினால் Krajewski – அருள்பணி ரொபெர்த்தோ அவர்கள், தன் நண்பர்களுக்காக உயிரைக்கொடுப்பதைவிட மேலான அன்பு யாரிடமும் இல்லை என்ற நற்செய்தி கூற்றின்படி வாழ்ந்தவர். இந்த கூற்றை தனக்குரியதாக அமைக்காத எவரும் உண்மையான கிறிஸ்தவராக இருக்க இயலாது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

படைப்பின் காலத்தை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டு வருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  செப்டம்பர் 19, இச்சனிக்கிழமையன்று, படைப்பின் காலம் (#SeasonOfCreation) என்ற ஹாஷ்டாக்குடன் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “நம் இறைத்தந்தையாம் கடவுள், நம் பூமிக்கோளத்தை உருவாக்கியபோது அது எவ்வாறு இருக்கவேண்டும் என்று கனவு கண்டாரோ, அந்தக் கனவை நனவாக்கவும், அமைதி, அழகு, மற்றும், முழுமை ஆகிய அவரின் திட்டத்தோடு ஒத்திணங்கச் செய்யவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம்” என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

அருள்பணி ரொபெர்த்தோவின் அடக்கச்சடங்கு

மேலும், செப்டம்பர் 15, இச்செவ்வாயன்று, இத்தாலியின், கோமோ என்ற நகரில், கொல்லப்பட்ட அருள்பணி ரொபெர்த்தோ மால்ஜெஸீனி (Roberto Malgesini) அவர்களுக்கு, செப்டம்பர் 19, இச்சனிக்கிழமை காலையில் நடைபெற்ற இறுதி வழியனுப்பு திருப்பலியில் கலந்துகொண்ட அனைவரின் மனவேதனையில் தானும் பங்குபெறுவதாகத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கோமோ நகர் பேராலயத்தில் நடைபெற்ற இந்த அடக்கச்சடங்கு திருப்பலியில், திருத்தந்தையின் பிரதிநிதியாக, திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பான, கர்தினால் Konrad Krajewski அவர்கள் பங்குபெற்றார்.

இத்திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால் Krajewski அவர்கள், அருள்பணி ரொபெர்த்தோ அவர்கள், இறந்தாலும், வாழ்கின்றார், ஏனெனில், அன்புக்கு ஒருபோதும் இறப்பில்லை, மரணம்கூட அதை மரணிக்க வைக்க இயலாது என்று கூறினார்.

அருள்பணி ரொபெர்த்தோ அவர்கள், தன் நண்பர்களுக்காக உயிரைக்கொடுப்பதைவிட மேலான அன்பு யாரிடமும் இல்லை என்ற நற்செய்தி கூற்றின்படி வாழ்ந்தவர் என்றும், இந்த நற்செய்தி கூற்றை தனக்குரியதாக அமைக்காத எவரும், உண்மையான கிறிஸ்தவராக இருக்க இயலாது என்றும், இவரது வாழ்வு, அருள்பணியாளர்களுக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு என்றும், கர்தினால் Krajewski அவர்கள் கூறினார்.

கோமோ நகரின் சான் ரோக்கோ பகுதியில், பணியாற்றிய 51 வயது நிறைந்த அருள்பணி ரொபெர்த்தோ அவர்கள், தன் அருள்பணித்துவ வாழ்வில், வறியோர், வீடற்றோர், மற்றும் சமுதாயத்தால் ஒடுக்கப்பட்டோர் நடுவே உழைத்துவந்தவர்.

ஒவ்வொருநாளும் காலையில், வறியோருக்கு, காலை உணவை வழங்கிவந்த அருள்பணி ரொபெர்த்தோ அவர்கள், செப்டம்பர் 15, இச்செவ்வாய் காலை ஏழுமணி அளவில், காலை உணவு பொட்டலங்களை ஏந்தியவண்ணம், தன் இல்லத்தை விட்டு வெளியேறியபோது, 53 வயது நிரம்பிய டுனிசியா நாட்டு புலம்பெயர்ந்த ஒருவரால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். இந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என்று சொல்லப்படுகிறது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2020, 14:24