தேடுதல்

ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 45வது இணையவழி அமர்வு ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 45வது இணையவழி அமர்வு 

திருப்பீடம்: பெலாருசில் அமைதி, நீதி தீர்வுக்கு அழைப்பு

பெலாருஸ் நாட்டில், சமுதாய ஒப்புரவு மற்றும், நல்லிணக்கத்திற்கு ஆதரவாக, கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பங்கு, மிகத்தெளிவாகப் புரிந்துகொள்ளப்படவேண்டும் – ஐ.நா.வில் பேராயர் யூர்க்கோவிச்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பெலாருஸ் நாட்டில் அண்மையில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலுக்குப்பின் அந்நாட்டில் உருவாகியுள்ள சமுதாய-அரசியல் நெருக்கடி சூழலுக்கு, அமைதியும், நீதியும் நிறைந்த தீர்வு காணப்படுமாறு, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. மனித உரிமைகள் அவையில் கேட்டுக்கொண்டார்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. மற்றும், பன்னாட்டு அமைப்புகள் நடத்தும்  கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் இவான் யூர்க்கோவிச் அவர்கள், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 45வது இணையவழி அமர்வில், “மின்ஸ்க் நகரின் இக்கட்டான சூழல்” குறித்து, செப்டம்பர் 18, இவ்வெள்ளியன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், இவ்வாறு உலக சமுதாயத்தை வலியுறுத்தினார்.

பெலாருஸ் நாட்டில், சமுதாய ஒப்புரவு மற்றும், நல்லிணக்கத்திற்கு ஆதரவாக, கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பங்கை, மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்ட பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், அந்நாட்டில் வன்முறை கைவிடப்பட்டு, நீதியும் அமைதியும் மதிக்கப்படும் சூழலில், நேர்மையான ஓர் உரையாடல் வழியாக பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்றும் கூறினார். 

பெலாருஸ் குறித்து யுனிசெப்

மேலும், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 45வது இணையவழி அமர்வில் இடம்பெற்ற பெலாருஸ் நாட்டு பிரச்சனைகள் குறித்த கலந்துரையாடலில் பேசிய யுனிசெப் அமைப்பின் பெலாருஸ் பகுதியின் இயக்குனர் Afshan Khan அவர்கள், அந்நாட்டில் அமைதியாக இடம்பெற்ற போராட்டங்களில், 240 சிறார் குற்றம் சாட்டப்பட்டுள்ளது பற்றி குறிப்பிட்டார்.

போராட்டங்களை அடக்க, மிகக் கடுமையான சட்டம் பயன்படுத்தப்படுகின்றது என்றும், சிறார் உட்பட கைதுசெய்யப்பட்டவர்கள் கடுமையாய் நடத்தப்படுகின்றனர் என்றும் Khan அவர்கள் கூறினார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2020, 14:41