தேடுதல்

சிம்பாப்வேயில் தண்ணீர் பற்றாக்குறை சிம்பாப்வேயில் தண்ணீர் பற்றாக்குறை 

மக்கள், பூமிக்கோளத்தின் நலத்திற்கு தண்ணீர்

தண்ணீரைப் பெறுவதற்குள்ள உரிமை, மனித மாண்பை அடிப்படையாகக் கொண்டது. இயற்கை வளங்களை மேலாண்மை செய்வதைப் பொருத்தவரை, உலகளாவிய சமுதாயத்திடம், ஒரு புதிய முறை ஒருமைப்பாட்டுணர்வு தேவைப்படுகின்றது - பேராயர் யூர்க்கோவிச்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மனித வாழ்வுக்கும், மனித சமுதாயத்தின் வருங்காலத்திற்கும் மிக இன்றியமையாத மூலப்பொருளாகிய தண்ணீரை, நாம் பாதுகாத்து, பகிர்ந்துகொள்வதைப் பொருத்தே, மக்களும், பூமிக்கோளமும் நலமாக இருக்க இயலும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. கூட்டம் ஒன்றில் எடுத்துரைத்தார்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. மற்றும், பன்னாட்டு அமைப்புகள் நடத்தும்  கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் இவான் யூர்க்கோவிச் அவர்கள், செப்டம்பர் 16, இப்புதனன்று, ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 45வது இணையவழி அமர்வில், “சுத்தமான குடிநீர் பாதுகாப்பு மற்றும், நலவாழ்வு” என்ற தலைப்பில் ஆற்றிய உரையில், இவ்வாறு கூறினார்.

தண்ணீர் வாழ்வுக்கு இன்றியமையாதது

தண்ணீரும், நலமான வாழ்வும், மனிதரின் அடிப்படை தேவைகள் மட்டுமல்ல, மாறாக, அவை, நாம் வாழ்கின்ற இந்த பூமிக்கோளத்தின் நலத்திற்கு, மிக இன்றியமையாத கூறுகளாகும் என்ற, திருப்பீடத்தின் நிலைப்பாட்டையும், பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் குறிப்பிட்டார்.

தண்ணீரைப் பெறுவதற்குள்ள உரிமை, மனித மாண்பை அடிப்படையாகக் கொண்டது என்றும், இயற்கை வளங்களை மேலாண்மை செய்வதைப் பொருத்தவரை, உலகளாவிய சமுதாயத்திடம், ஒரு புதிய முறை ஒருமைப்பாட்டுணர்வு தேவைப்படுகின்றது என்றும் கூறிய பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், சமுதாயப் பொறுப்புணர்வு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மனநிலை, மற்றும், நாடுகள் மத்தியில் தோழமையுணர்வு ஆகியவை, தண்ணீர் வளங்களை நிர்வகிப்பதற்கு அவசியம் என்று எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 September 2020, 14:08