தேடுதல்

காரித்தாஸ் பணிகள் காரித்தாஸ் பணிகள்  

போர்களும் வன்முறைகளும் முடிவுக்கு வர காரித்தாஸ் விண்ணப்பம்

அமைதியையும் இணக்க வாழ்வையும் கட்டியெழுப்புவோருக்கும், மதங்களிடையே உரையாடல்களை மேற்கொள்வோருக்கும் ஊக்கம் வழங்கப்பட வேண்டியது அவசியம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

இம்மாதம் 21ம் தேதி சிறப்பிக்கப்பட்ட உலக அமைதி நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள அனைத்துலக காரித்தாஸ் அமைப்பு, உலகம் முழுவதும் போர்களும், வன்முறைகளும் முடிவுக்கு வரவேண்டும் என்ற விண்ணப்பத்தை விடுத்துள்ளது.

அனைத்து மோதல்களும் நிறுத்தப்படவேண்டும் என விண்ணப்பிக்கும் இந்த கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, குறிப்பாக, மத்தியக் கிழக்கு நாடுகளில் இடம்பெறும் பதட்ட நிலைகள் முடிவுக்கு வரவேண்டும் எனவும், பேச்சு வார்த்தைகள் வழியாக அரசியல் தீர்வுகாண நாடுகள் முன்வரவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளது.

அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி, அமைதிக்கென ஒவ்வொருவரும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என விண்ணப்பிக்கும் காரித்தாஸ் அமைப்பின் செய்தி, அமைதி எனும் சிறந்த மதிப்பீட்டை உயர்த்திப் பிடிப்பதே, மனித குலத்திற்கு முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும் என எடுத்துரைத்துள்ளது.

அமைதி எனும் கலாச்சாரம் அனைத்து சமுதாயங்களிலும், வளர்க்கப்பட்டு, பகிரப்பட்டு வாழப்பட வேண்டும் என விண்ணப்பிக்கும் அனைத்துலக காரித்தாஸ் அமைப்பு, ஒரு நாட்டிற்கு, குறிப்பாக, இன்று சிரியாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரக் கட்டுப்பாடுகள் அமைதிக்கு உதவுவதில்லை, மாறாக, மேலும் மோதல்கள் பெருகவே உதவுகின்றன எனவும் கூறியுள்ளது.

அமைதியையும் இணக்க வாழ்வையும் கட்டியெழுப்புவோருக்கு ஆதரவும், மதங்களிடையே உரையாடல்களை மேற்கொள்வோருக்கு ஊக்கமும் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது காரித்தாஸ் அமைப்பு.

மனிதனின் சுயநலம், பேராசை, சுரண்டல், மத, இன பாகுபாடுகள், சுற்றுச்சூழல் அழிப்பு போன்றவைகளால் எழுந்துள்ள மோதல்களும் வன்முறைகளும், பல இலட்சக்கணக்கான மக்களின் துயர் நிலைகளுக்கு காரணமாகியுள்ளன, என்று கூறியுள்ள இக்கத்தோலிக்க உதவி அமைப்பு, கோவிட்-19 கொள்ளை நோய்க்கெதிரான போராட்டத்தில் உலகம் முழுவதும் ஒருமித்தக் கருத்து உருவாகியதுபோல், பிரிவினைகளுக்கும், பகைமை உணர்வுகளுக்கும் எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும்  என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2020, 14:01