மொரீசியஸ் தீவு நாடு மொரீசியஸ் தீவு நாடு 

அன்பு, ஒருமைப்பாடு என்ற உலகளாவியப் பரவலை வளர்க்க...

நாம் எல்லாரும், படைப்பின் பாதுகாவலர்கள் என்ற முறையில், ஒருமைப்பாடு மற்றும், அன்பு நிறைந்த ஒரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கு, இறைவேண்டல் செய்வோம் மற்றும், அதற்காகச் செயல்படுவோம் – உலகளாவிய காரித்தாஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

கோவிட்-19 கொள்ளைநோய், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை மதிப்பதற்கு நம் அனைவருக்கும் விடுக்கும் அழைப்பாக உள்ளது என்று, பன்னாட்டு காரித்தாஸ் நிறுவனம் கூறியுள்ளது.

செப்டம்பர் 01, இச்செவ்வாயன்று, உலக அளவில் கிறிஸ்தவர்கள் அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்ட, படைப்பு பாதுகாக்கப்படுவதற்காக, இறைவேண்டல் செய்யும் உலக நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள பன்னாட்டு காரித்தாஸ் நிறுவனம், நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாக்கும்பொருட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டுள்ள, துணிச்சலான நடவடிக்கைகளில், காரித்தாஸ் நிறுவனமும் இணைகின்றது என்று கூறியுள்ளது.

நாம் எல்லாரும், படைப்பின் பாதுகாவலர்கள் என்ற முறையில், ஒருமைப்பாடு மற்றும், அன்பு நிறைந்த ஒரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கு, இறைவேண்டல் செய்வோம் மற்றும், அதற்காகச் செயல்படுவோம் என்றும், காரித்தாசின் செய்தி கூறுகிறது.

பூமியோடு உறவை உருவாக்குவோம்

அன்னை பூமியோடு நமக்குள்ள உறவைக் கட்டியெழுப்புவதில், நம் இதயங்களையும் மனங்களையும் புதுப்பிப்போம், மற்றும், கடவுளோடு உள்ள உறவை உறுதிப்படுத்துவோம்  எனவும், 165 தேசிய கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்புகளின் கூட்டமைப்பான, பன்னாட்டு காரித்தாஸ் நிறுவனத்தின் செய்தி கூறுகிறது.  

அரசியல், பொருளாதார, சமுதாய, ஆன்மீக, மற்றும், கலாச்சார கூறுகள் அனைத்தும், ஒன்றோடொன்று எவ்வாறு தொடர்புகொண்டுள்ளன என்பதை, கோவிட்-19 கொள்ளைநோய் உணர்த்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள காரித்தாஸ் நிறுவனம், தற்போதைய கொள்ளைநோய் காலம், ஒருமைப்பாட்டுணர்வைக் கட்டியெழுப்புவதற்கு அழைப்பு விடுக்கின்றது என்றும் கூறியுள்ளது.

ஒருமைப்பாட்டுணர்வைக் கட்டியெழுப்புவதற்கு

அநீதியான அமைப்பு முறைகள் உருவாக்கியுள்ள சூழலியல், நோய்கள் பரவுவதையும், இந்த நுண்கிருமியின்முன், நாமும், நம் வாழ்வும் எவ்வளவு பலவீனமானவை என்பதையும் உணர வைத்துள்ளது என்றுரைக்கும் அந்த செய்தி, நாம் அந்த நுண்கிருமிக்குப் பலிகடாக்கள் ஆகிவிடாமல் உறுதி செய்யவும், நம் வாழ்வைப் பாதுகாக்கவும், நம் கரங்களை ஒன்றிணைப்பதற்கு, இந்த கொள்ளைநோய் காலம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் உரைத்துள்ளது. 

படைப்பின் காலம்

செப்டம்பர் 01, இச்செவ்வாயன்று, அனைத்து கிறிஸ்தவர்களும், ஒரு மாதகாலம்,  படைப்பின் காலத்தைத் துவக்கியுள்ளனர். ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தந்தை முதலாம் Dimitrios அவர்கள், 1989ம் ஆண்டில், படைப்புப் பாதுகாக்கப்படுவதற்காக, இறைவேண்டல் செய்யும் நாளாக, அந்த கிறிஸ்தவ சபையில், செப்டம்பர் முதல் தேதியை அறிவித்தார்.

WCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம், படைப்பின் பாதுகாப்பிற்காக இறைவேண்டல் செய்யும் நாளை, ஒரு மாத காலத்திற்கு, அதாவது செப்டம்பர் முதல் தேதியிலிருந்து, அக்டோபர் 4ம் தேதி வரை நீட்டித்தது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டில், நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பது குறித்த, வரலாற்று சிறப்புமிக்க, “Laudato Si’" அதாவது இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலை வெளியிட்டு, இந்த படைப்பின் காலத்தில் இணைந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2020, 13:47