தேடுதல்

புதிய கப்பல் ஒன்றை அருள்பணியாளர் ஆசீர்வதிக்கிறார் புதிய கப்பல் ஒன்றை அருள்பணியாளர் ஆசீர்வதிக்கிறார்  

கரை இறங்கமுடியாமல் கடலிலேயே வாழும் 3 இலட்சம் பேர்

கப்பலில் பணிபுரிவோர், கப்பல்படையில் பணிபுரிவோர், மற்றும், கடல்பயணிகள் என கடலோடு தொடர்புடையவர்களுக்கென மேய்ப்புப்பணியை திருஅவையின் Stella Maris அமைப்பு துவக்கியதன் 100ம் ஆண்டு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள் 

கடல் வணிகம் செய்வோர், கப்பலில் பணிபுரிவோர் என, மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கோவிட்-19 கொள்ளைநோய் கட்டுப்பாடுகளால், கரையில் இறங்கமுடியாமல் கடலிலேயே வாழ்ந்து வருவதாக, கவலையை வெளியிட்டுள்ளார், கர்தினால் பீட்டர் டர்க்சன்.

கப்பலில் பணிபுரிவோர், கப்பல்படையில் பணிபுரிவோர், மற்றும், கடல்பயணிகள் என கடலோடு தொடர்புடையவர்களுக்கென மேய்ப்புப்பணியை, திருஅவையின் Stella Maris அமைப்பு துவக்கியதன் நூறாம் ஆண்டு இவ்வாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில், அதற்கென செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், தற்போதைய கொள்ளைநோயால், கரை இறங்க முடியாமல் கடலிலேயே வாழும் மக்கள் சார்பில் அரசுகளுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார்.

கடல் தொழிலாளர் ஒப்பந்தப்படி, ஒருவர் அதிகப்படியாக 11 மாதங்களே கடலில் தொடர்ந்து பணிபுரியமுடியும் என்ற எல்லையையும் தாண்டி, பலர் இன்னும் கடலிலேயே இருக்கும் நிலையை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், அவர்கள் தங்கள் குடும்பங்களோடு இணைவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் Glasgow நகரில் அக்டோபர் மாதம் 4ம் தேதி இடம்பெறுவதாக திட்டமிடப்பட்டு, தற்போது இணையம் வழியாக நடைபெற உள்ள, திருஅவையின் Stella Maris பணிக்குழுவின் நூறாமாண்டு கொண்டாட்டங்களுக்கு, தன் செய்தியை தற்போதே வெளியிட்டுள்ளார் கர்தினால் டர்க்சன்.

கடல் சார்புடைய தொழிலாளர்களுக்கென Glasgowவில் துவக்கப்பட்ட இந்த கடல்பயணிகள் மேய்ப்புப்பணி அமைப்பு, இந்த நூற்றாண்டு விழாவில், தன் 25வது உலக கடல் பணியாளர் கருத்தரங்கையும் நடத்துகிறது.

கடந்த நூறாண்டுகளாக கடல் பயணிகள், மற்றும், கடல் பணியாளர்களுக்கென உலகம் முழுவதும் உள்ள 300க்கும் மேற்பட்ட துறைமுகங்களில் பணியாற்றிவரும் திருஅவைப் பணியாளர்கள், ஒவ்வோர் ஆண்டும் 70 ஆயிரம் கப்பல்களைச் சந்திப்பதுடன் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு உதவிகளை ஆற்றி வருகின்றனர்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2020, 12:02