தேடுதல்

Vatican News

ஐ.நா.வின் 75வது ஆண்டு நிறைவு கூட்டத்தில் கர்தினால் பரோலின்

உலக அமைதிக்கும், நாடுகளிடையே நல்லிணக்கம் நிலவுவதற்கும், உலகினர், கடந்த 75 ஆண்டுகளாக, ஐ.நா. நிறுவனத்தையே, நம்பிக்கையின் ஆதாரமாக நோக்கிவந்தனர் -கர்தினால் பரோலின்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு செப்டம்பர் 21, இத்திங்களன்று தொடங்கியுள்ள உயர்மட்ட இணையவழி கூட்டத்தில், உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், மிகவும் மதிப்புமிக்க இந்த நிறுவனத்திற்கு, திருப்பீடம் வழங்கும் ஆதரவை மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.

செப்டம்பர் 29, வருகிற செவ்வாய் முடிய நடைபெறும் இந்தக் கூட்டத்தில், இத்திங்களன்று உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், உலக அமைதிக்கும், நாடுகளிடையே நல்லிணக்கம் நிலவுவதற்கும், உலகினர், கடந்த 75 ஆண்டுகளாக, ஐ.நா. நிறுவனத்தையே, நம்பிக்கையின் ஆதாரமாக நோக்கி வந்தனர் என்று குறிப்பிட்டார். 

உலகளாவிய சட்டங்களை, ஆயுதங்களின் அடிப்படையில் அல்ல, மாறாக, நீதியின் அடிப்படையில் காக்கவும், போர்களையும், கலவரங்களையும் முடிவுக்குக் கொணரவும், மனிதரின் மாண்பு மிகவும் மதிக்கப்படவும், துன்பங்களையும், வறுமையையும் அகற்றி, நீதியை வளர்க்கவும் போன்ற, ஐ.நா. நிறுவனத்தின் இலக்குப் பணிகளை, அந்நிறுவனம், அனைத்து மனிதரிலும் சிறப்பாக ஆற்றியுள்ளது என்று கூறினார், கர்தினால் பரோலின். 

ஐ.நா.வில் திருப்பீடம் நிரந்தரப் பார்வையாளராக அங்கீகரிக்கப்பட்ட 1964ம் ஆண்டிலிருந்து, ஐ.நா.வின் முயற்சிகளுக்கு திருப்பீடம் தனது ஆதரவை வழங்கி வருவதையும், ஐ.நா. பொதுஅவையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரையாற்றியதையும், கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டுப் பேசினார்.

கோவிட்-19 சூழலில் நாம் நம்மை மட்டுமே நினைத்துக்கொண்டிருக்க முடியாது, அல்லது பிரவினைகளை வளர்த்துக்கொண்டிருக்க முடியாது, மாறாக, உலகைத் தாக்கியிருக்கும் மிக மோசமான இந்த கொள்ளைநோயிலிருந்து உலகினர் மீண்டுவர, நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து உழைக்கவேண்டும் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் வலியுறுத்தினார்.

பசித்திருப்போருக்கு உணவும், வீடற்றோருக்கு குடியிருப்பும் அமைத்துக் கொடுத்துவரும் ஐ.நா. நிறுவனம், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தைப் பாதுகாக்கவும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை வளர்க்கவும் தன்னை அர்ப்பணித்து வருகின்றது எனவும், இந்தப் பணிகளில் சவால்களும், தோல்விகளும், முரண்பாடுகளும் எதிர்கொள்ளப்பட்டாலும், ஐ.நா. நிறுவனம் மக்களுக்கு எப்போதும் அவசியம் எனவும், திருப்பீடச் செயலர் கூறினார்.

உலக மக்கள், உரையாடலில் ஒன்றிணையவும், பொதுவான செயல்திட்டங்களை உருவாக்கவும், இக்காலக்கட்டத்தில் குறைந்துவரும் மக்களின் நம்பிக்கைக்குப் பதில்கூறவும், எக்காலத்தையும்விட, இக்காலத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனம், அனைவருக்கும் தேவைப்படுகின்றது என்றும், திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள், ஐ.நா. இணையவழி உயர்மட்ட கூட்டத்தில் கூறினார்.

22 September 2020, 13:56