பெய்ருட்டில் கர்தினால் பரோலின் பெய்ருட்டில் கர்தினால் பரோலின்  

கட்டியெழுப்பும் ஆர்வத்தை லெபனான் மக்களிடம் காணமுடிகிறது

கர்தினால் பரோலின் : ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி இடம்பெற்ற வெடிவிபத்து ஏற்படுத்தியுள்ள பெரும் இழப்புகளையும், அதிலிருந்து மீண்டு, நாட்டை மறுபடியும் கட்டியெழுப்ப லெபனான் மக்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டையும் கண்டேன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

லெபனான் நாட்டில் தான் மேற்கொண்ட அண்மை மேய்ப்புபணி பயணத்தின்போது, ஆகஸ்ட் 4ம் தேதி இடம்பெற்ற வெடிவிபத்து ஏற்படுத்தியுள்ள பெரும் இழப்புகளையும், அதிலிருந்து மீண்டு, நாட்டை மறுபடியும் கட்டியெழுப்ப லெபனான் மக்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டையும் கண்டதாக உரைத்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

தான் லெபனான் நாட்டிலிருந்து திரும்பியபின், வத்திக்கான் செய்தி, மற்றும், ஆன்சா செய்தி நிறுவனங்களுக்கு, பேட்டியளித்தபோது இதனைக் குறிப்பிட்டார், கர்தினால் பரோலின்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களையும், 15 இலட்சம் புலம்பெயர்ந்த மக்களையும் கொண்டுள்ள லெபனான் நாட்டில், ஆகஸ்ட் 4ம் தேதி இடம்பெற்ற வெடிவிபத்தில், 178க்கும் மேற்பட்டோர் இறந்தும், 6,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், மூன்று இலட்சம் பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

ஏழ்மையையும், மோதல்களையும், முரண்பாடுகளையும் அண்மையில் வெடி விபத்தையும் சந்தித்துவரும் லெபனான் நாட்டிற்கு, திருத்தந்தையின் பிரதிநிதியாக சென்றுவந்த கர்தினால் பரோலின் அவர்கள், இந்த வெடிவிபத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களை தான் நேரடியாகக் கண்டுணர முடிந்தது, என்று கூறினார்.

லெபனான் நாட்டு  மக்களோடு இணைந்து நின்று அவர்களுக்கு உதவியாற்றிவரும் தலத்திருஅவை குறித்து தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார், திருப்பீடச் செயலர்.

லெபனான் நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவேண்டும் என, பலர்  தங்கள் ஆவலை வெளியிட்டாலும், தற்போதைய கொள்ளைநோய் பிரச்சினை முடிவடையும்வரை அது குறித்து சிந்திக்க முடியாது என்பதையும், கர்தினால் பரோலின் அவர்கள் தெளிவுபடுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 September 2020, 14:19