தேடுதல்

கருணைக்கொலை கருணைக்கொலை  

கருணைக்கொலை மனித வாழ்வுக்கு எதிரான குற்றம்

பல்வேறு நாடுகளில் கருணைக்கொலை பற்றிய புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ள இவ்வேளையில், “நல்ல சமாரியர்” மடல் மிகவும் தேவையானது - கர்தினால் லூயிஸ் லதாரியா

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

குணமாக்க இயலாத நோயுடன், வாழ்வின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிப்போரைப் பராமரிப்பது குறித்து, விசுவாசக்கோட்பாட்டு பேராயம், “Samaritanus bonus” அதாவது “நல்ல சமாரியர்” என்ற தலைப்பில், நீண்ட மடல் ஒன்றை, செப்டம்பர் 22, இச்செவ்வாயன்று, செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளது.

அயலவருக்குப் பராமரிப்பு, துன்புறும் கிறிஸ்துவின் உயிருள்ள அனுபவம் மற்றும், நம்பிக்கையை அறிவித்தல், மனித வாழ்வு புனிதமானது மற்றும், மீறமுடியாத கொடை என நோக்கும் சமாரியரின் இதயம், மனித வாழ்வின் புனித மதிப்பை ஒளியற்றதாய் ஆக்கும் கலாச்சாரத் தடைகள், திருஅவையின் அதிகாரப்பூர்வ போதனைகள் ஆகிய ஐந்து தலைப்புக்களில் இந்த மடல் வெளியிடப்பட்டுள்ளது.

கருணைக்கொலை மற்றும், பிறரின் உதவியால் ஆற்றப்படும் தற்கொலை, கொடூரமான மருத்துவ சகிச்சைகளை விலக்குவதற்குள்ள அறநெறி கடமை, குணமாக்க முடியாத நோயுடன், இறக்கும் நிலையிலுள்ளோருக்குப் பராமரிப்பு, குடும்பங்கள் மற்றும், அத்தகைய நோயாளிகளைப் பராமரிக்கும் இல்லங்கள், நலவாழ்வுப் பணியாளர்களுக்குப் பயிற்சி.. போன்றவற்றில் திருஅவையின் போதனைகள் குறித்தும், இந்த மடலில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

விசுவாசக்கோட்பாட்டு பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் லதாரியா அவர்கள் தலைமையில், அப்பேராயத்தின் செயலர் பேராயர் Giacomo Morandi அவர்களும், பொதுநிலையினர், கடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் நேரடிப் பொதுச்செயலர் பேராசிரியர் Gabriella Gambino அவர்களும், திருப்பீட வாழ்வுக் கழகத்தின் உறுப்பினரான பேராசிரியர் Adriano Pessina அவர்களும், இந்த மடலை வெளியிட்டு, இம்மடல் குறித்த தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

கர்தினால் லூயிஸ் லதாரியா

மேலும், "நல்ல சமாரியர்" என்ற இந்த மடலின் முக்கியத்துவம் குறித்து வத்திக்கான் செய்தித் துறைக்குப் பேட்டியளித்த கர்தினால் லூயிஸ் லதாரியா அவர்கள், இந்த மடல் வெளியிடப்பட்டிருப்பதன் முக்கிய நோக்கம் பற்றி விளக்கியுள்ளார்.

பல்வேறு நாடுகளில் கருணைக்கொலை பற்றிய புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ள இவ்வேளையில், இந்த மடல் மிகவும் தேவையானது என்றுரைத்த கர்தினால் லதாரியா அவர்கள், கொடிய நோயால் தாக்கப்பட்டு, இறக்கும் நிலையிலுள்ள நோயாளிகளைப் பராமரிப்பது, அவர்களுக்கு, உடல் மற்றும், ஆன்மீக அளவில் உதவுவது குறித்து, இந்த மடல் எடுத்துரைக்கின்றது என்று கூறியுள்ளார். 

துன்புறும் நோயாளிகளுக்கு, ஒருங்கிணைந்த பராமரிப்பு அவசியம் என்றும், இதற்கு திருஅவையின் மேய்ப்புப்பணி வழிகாட்டுதல்கள் அவசியம் என்றும், 2018ம் ஆண்டில், விசுவாசக் கோட்பாட்டுப் பேராயரம் நடத்திய ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதே, இத்தகைய மடல் ஒன்றை வெளியிடுவதற்கு காரணம் என்று கர்தினால் லதாரியா அவர்கள் கூறினார்.

நோயாளி ஒருவருக்கு, மரணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்ற நிலையிலும், மனித வாழ்வின் அர்த்தம் என்ன என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்றும், அவர் இறக்கும்வரை சிகிச்சை வழங்கப்படவேண்டும் என்றும், மனிதரை, முழுமையாக நோக்கவேண்டும் என்றும், கர்தினால் லதாரியா அவர்கள் கூறினார்.

திருஅவை, மனித வாழ்வின் அர்த்தத்தை, நேர்மறைச் சிந்தனையோடு நோக்குவதை ஒருபோதும் நிறுத்திக்கொள்ளாது என்றும், மனித வாழ்வின் புனிதம், மற்றும், மீறமுடியாத அதன் மாண்பு, துன்புறும் நோயாளிகளில் தவறாகப் புரிந்துகொள்ளப்படக் கூடாது என்றும், குணமாக்க இயலாத நோய் என்பது, குணமாக்க இயலாதது என்பதற்கு ஒருபோதும் இணையாக இருக்கஇயலாது என்றும், குணமாக்க இயலாதது என்பது,  மருத்துவப் பராமரிப்பை முடித்துக்கொள்வது என்பதல்ல என்றும், விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் தலைவர் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2020, 14:05