பெலாருஸ் நாட்டில் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் பெலாருஸ் நாட்டில் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் 

பெலாருஸ் நாட்டில் பேராயர் காலகர் அவர்களின் பயணம்

செப்டம்பர் 11ம் தேதி, அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்புக்களைத் தொடர்ந்து, செப்டம்பர் 12ம் தேதி, பெலாருஸ் நாட்டில் பணியாற்றும் அனைத்து ஆயர்களையும் பேராயர் காலகர் அவர்கள் சந்தித்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள், செப்டம்பர் 11ம் தேதி முதல் 14ம் தேதி முடிய, பெலாருஸ் நாட்டில் மேற்கொண்ட ஒரு பயணத்தின் விவரங்களை, வத்திக்கான் செய்தியும், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவும் செப்டம்பர் 16 இப்புதனன்று வெளியிட்டுள்ளன.

பெலாருஸ் நாட்டில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில், அந்நாட்டின் நீண்டகால அரசுத்தலைவர் Alexander Lukashenko அவர்கள் வெற்றிபெற்றார் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, அந்நாட்டில் பல வாரங்களாக எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் வேளையில், அந்நாட்டு மக்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அருகாமையை வெளிப்படுத்துவதற்காக, பேராயர் காலகர் அவர்கள், அந்நாட்டில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டார்.

பேராயர் காலகர் அவர்களுடன், பெலாருஸ் நாட்டில் பணியாற்றும் திருப்பீடத்தூதர் பேராயர் அந்தோனியோ மென்னினி அவர்களும், செயலராகப் பணியாற்றும் பேராயர் பால் புத்னாரு அவர்களும் பெலாருஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க்கில் பல்வேறு அமைச்சர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டனர்.

பெலாருஸ் நாட்டில், அனைத்து மக்களுக்கும் உதவும் வண்ணம், கத்தோலிக்கத் திருஅவை தன் பணிகளை எவ்வாறு தொடரமுடியும் என்ற மையக்கருத்து இச்சந்திப்புக்களில் பேசப்பட்டதென்று, பேராயர் காலகர் அவர்கள் கூறினார்.

செப்டம்பர் 11ம் தேதி, அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்புக்களைத் தொடர்ந்து, செப்டம்பர் 12ம் தேதி, பெலாருஸ் நாட்டில் பணியாற்றும் அனைத்து ஆயர்களையும் பேராயர் காலகர் அவர்கள் சந்தித்து, இந்தக் கடினமானச் சூழலில் திருஅவை ஆற்றவேண்டிய பணிகள் பற்றி பேசினார்.

செப்டம்பர் 13ம் தேதி, ஞாயிறன்று, மின்ஸ்க் நகரில் உள்ள திருப்பீட தூதரகத்தில், பேராயர் காலகர் அவர்கள் நிறைவேற்றிய திருப்பலியில், அந்நாட்டில் பணியாற்றும் ஏனைய நாட்டு கத்தோலிக்கத் தூதர்கள் பங்கேற்றனர்.

திருத்தந்தையின் சார்பில் பேராயர் காலகர் அவர்கள் மேற்கொண்ட இந்தப் பயணத்தை நிறைவு செய்து, அவர், செப்டம்பர் 14ம் தேதி திங்களன்று, வத்திக்கான் திரும்பினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2020, 13:39